UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:23 AM

கோவை:
கோவை புத்தகத் திருவிழா, வரும் ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை, கொடிசியா வணிக வளாகத்தில் நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு, இளம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
கவிதை தொகுப்பு, புனைவு மற்றும் புனைவு சாராதவை என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. பரிசு பெறும் நுால்களை வெளியிட்ட பதிப்பாளர்களுக்கும், 5000 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
விருதுக்கு விண்ணப்பிக்கும் இளம் எழுத்தாளர்கள், 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2022 -23 ஆண்டுகளில் வெளிவந்த இரண்டு நுால்கள், சுயவிவரக் குறிப்பு மற்றும் பிறப்பு சான்றின் நகல் ஆகியவை இணைத்து அனுப்பவேண்டும்.
பரிசு பெறும் நுால்கள், நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும். கவிதையை தவிர, மற்ற நுால்கள் 100 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், பட்டயமும் வழங்கப்படுகிறது.
இளம் படைப்பாளர்கள், தங்கள் படைப்புகளை மே 31ம் தேதிக்குள், கோயம்புத்துார் புத்தகத் திருவிழா 2024, கொடிசியா, ஜி.டி.நாயுடு டவர்ஸ், ஒசூர் ரோடு கோவை, 641 018 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 0422 222 2396 தொலைபேசி எண் மற்றும் 88705 06333 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.