ஊழல், வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை: பாடப்புத்தகத்தில் சேர்த்த என்.சி.இ.ஆர்.டி.,
ஊழல், வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை: பாடப்புத்தகத்தில் சேர்த்த என்.சி.இ.ஆர்.டி.,
UPDATED : பிப் 25, 2026 11:22 AM
ADDED : பிப் 25, 2026 11:24 AM

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என ஊழல், வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை என குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாட திட்டங்களை தயாரிக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடத்தை சேர்த்துள்ளது.
அதில், நீதித்துறையில் பல்வேறு மட்டங்களில் ஊழல் குறித்த அனுபவங்களை மக்கள் பார்த்துள்ளனர். ஏழைகளை பொறுத்தவரை நீதியை பெறுவதில் அவர்களுக்கு ஊழல் மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
நீதித்துறை அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்தவும், நம்பிக்கையை கட்டமைக்கவும் மத்திய மற்றும் மாநில அளவுகளில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதுடன், ஊழல் குற்றச்சாட்டு எழும் போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் சுப்ரீம் கோர்ட்டில் 81 ஆயிரம் வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 62 லட்சத்து 40 ஆயிரம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4 கோடியே70 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
நீதித்துறையில் உள்ளவர்களுக்கு எதிராக 2017 முதல் 2021ம் ஆண்டு வரை 1,600 புகார்கள் வந்துள்ளதாகவும், நீதி அமைப்பில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஒழுங்கீனங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து 2025ம் ஆண்டு அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியது குறித்தும் 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

