நான்கு மாத இழுபறிக்கு பின் மதுரை மருத்துவக் கல்லுாரிக்கு டீன்
நான்கு மாத இழுபறிக்கு பின் மதுரை மருத்துவக் கல்லுாரிக்கு டீன்
UPDATED : அக் 04, 2024 12:00 AM
ADDED : அக் 04, 2024 10:19 AM

மதுரை :
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை பிரிவு துறைத்தலைவர் அருள் சுந்தரேஷ் குமார் நியமிக்கப்பட்டார்.
மூன்றாண்டுகள் டீனாக இருந்த டாக்டர் ரத்தினவேல் ஏப். 30 ல் பணிஓய்வு பெற்றார். அதன் பின் பொறுப்பு டீனாக பொதுமருத்துவப்பிரிவு பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப்பட்டு அவரும் ஆக. 31 ல் பணிஓய்வு பெற்றார். செப். 1ல் இதய பிரிவு துறைத்தலைவர் செல்வராணி, டீன் பொறுப்பேற்றார். தொடர்ந்து பொறுப்பு டீன்களால் வார்டுகளில் சிறு கட்டுமானப் பணிகள், நிர்வாகப்பணிகள் ஸ்தம்பிப்பதாகவும் நோயாளிகளுக்கான பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
மராமத்து, கழிப்பறை பராமரிப்பு என ஏற்கனவே செய்த வேலைகளுக்காக மருத்துவமனை நிர்வாகம் பணம் தரவில்லை என்று பொதுப்பணித்துறையினர் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக இரு துறைகளுக்கும் இடையே தற்போது வரை பனிப்போர் தொடர்கிறது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவு துறைத்தலைவராக உள்ள அருள் சுந்தரேஷ் குமார் டீனாக நேற்று நியமிக்கப்பட்டார்.
பழைய அரசு மருத்துவமனையின் பெரும்பாலான வார்டுகளில் கழிப்பறை பகுதி நீர்க்கசிவால் கீழ்ப்பகுதி கட்டடங்கள் இடிந்தும் ஸ்திரமற்ற நிலையிலும் காணப்படுகிறது. புதிய டீன் பொறுப்பேற்ற உடன் பொதுப்பணித்துறையுடன் இணைந்து நோயாளிகளின் வசதிகளுக்காக அனைத்து சேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.