தமிழ் வழியில் படிக்க ஒவ்வொரு தொகுதியிலும் பள்ளி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை
தமிழ் வழியில் படிக்க ஒவ்வொரு தொகுதியிலும் பள்ளி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை
UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 10:36 AM
புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் கேள்வி நேரத்தின்போது தமிழில் கல்வி பயில பள்ளியை தேர்வு செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
ஆறுமுகம்(என்.ஆர்.காங்.,): புதுச்சேரி சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் ஆங்கிலத்தில் படிக்க கடினமாக இருப்பதாக மாணவர்கள், பெற்றோர் நினைக்கின்றனர். அவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயில தொகுதிதோறும் ஒரு பள்ளியை தேர்வு செய்யவேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்:தரமான கல்வி தர வேண்டும் என்பதற்காக தான் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் தொகுதிக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்துஅறிவிக்கும் திட்டம் இல்லை.
ஆறுமுகம்(என்.ஆர்.காங்.,):சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, தமிழ்நாடு பாடத்திட்டம் எளிமையாக இருக்கும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடினமாக நினைக்கும் மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயில ஏற்பாடு செய்ய வேண்டும்.
நேரு (சுயேச்சை): புதுச்சேரியில் தமிழில் படிப்பது குறைந்துவிட்டது. இது நல்லது அல்ல. தமிழில் படிப்பதை தான்மாணவர்கள் விரும்புகின்றனர்.
வைத்தியநாதன்(காங்.,): சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தால் புதுச்சேரியில் பெற்றோர் மன உளைச்சலில் உள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கான கட்டமைப்பு இன்னும் புதுச்சேரியில் உருவாக்கவில்லை. அதற்குள் சி.பி.எஸ்.இ., ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: மாணவர்களின் எதிர்காலத்திற்கு எதிராகவும், பெற்றோர்களின் எண்ணத்திற்கு எதிராக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உள்ளது. இதுகுறித்து முதல்வர் நல்ல முடிவினை தெரிவிக்க வேண்டும். கல்வி அமைச்சரை தாண்டி முதல்வர் பதில் சொன்னால் நன்றாகஇருக்கும்.
தமிழ் மொழியை துாக்கி விட்டார்கள். விருப்ப பாடத்தில் கூட தமிழ் இல்லை. இது புதுச்சேரியில் மட்டும் தான் நடக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.