UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 10:35 AM
மதுரை:
திட்டமில்லா பகுதிகளில் 2011 டிச.1க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 31.1.2025 வரை 6 மாதம் கால நீட்டிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள், மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில், அதற்கான வழிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
மேலும் மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்பு பகுதியாகவோ, முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும், விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள், மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த வரும் நவ.30 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். எனவே வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறை செய்ய இது இறுதி வாய்ப்பாக அமைவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.