UPDATED : ஏப் 10, 2025 12:00 AM
ADDED : ஏப் 10, 2025 05:54 PM
மதுரை:
சிறந்த வேதியியல் ஆசிரியர் விருது 2025 பெற்ற மதுரை அரசு பள்ளி ஆசிரியர் மீனாட்சிசுந்தரத்திற்கு தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
முதுகலை வேதியியல் ஆசிரியரான இவர், 1989 ம் ஆண்டு தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியை துவக்கினார். தொடர்ந்து 2010 ம் ஆண்டு முதல் மதுரை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வேதியியல் ஆசிரியராக பணியில் சேர்ந்து தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 26 ம் தேதி தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் சிறந்த வேதியியல் ஆசிரியர் 2025 ம் ஆண்டுக்கான விருதை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பெற்றார்.
கல்வியில் கீழ் தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்தி எளிமையான முறையில் பாடங்களை கற்றுக் கொடுத்து பொதுத் தேர்வுகளில் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து சாதனை படைத்து வருகிறார். மேலும் உயர் கல்வி போட்டி தேர்வுகளான நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக கற்பித்து வருகிறார். இதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் தலை சிறந்த டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் மிளர்கின்றனர். சாதனை ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டு தோறும் லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருதை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பெற்றார். இந்த விருது மூலம் கல்வி மேம்பாட்டில் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் என மனதில் உத்வேகம் ஏற்பட்டதாக பெருமிதம் கொள்கிறார் கல்வியில் சாதனை படைத்து வரும் முதுகலை வேதியியல் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். அவரது போற்றுதலுக்குரிய கல்விப் பயணம் மென்மேலும் வளர்ந்து பீடு நடை போட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

