கல்விக்கோவிலில் அடியெடுத்து வைத்த மழலை செல்வங்கள் தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் கரைபுரண்ட உற்சாகம்
கல்விக்கோவிலில் அடியெடுத்து வைத்த மழலை செல்வங்கள் தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் கரைபுரண்ட உற்சாகம்
UPDATED : அக் 21, 2026 04:57 PM
ADDED : அக் 21, 2026 04:59 PM
புதுச்சேரி:
தினமலர் நாளிதழ் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர், தங்களது மழலைச் செல்வங்களுடன் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
விஜயதசமி நாளில் கல்வி, கலை உள்ளிட்ட புதிய முயற்சிகளைத் தொடங்கினால் வெற்றி கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கை. அத்தகைய மங்கலமான நன்னாளில், மழலைகளின் மனதில் கல்வியின் மீதான ஆர்வத்தை விதைத்து, அவர்களின் எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் வகையில், தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் அரிச்சுவடி ஆரம்பம் என்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் விவேகானந்தா கல்விக் குழுமம் சார்பில், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள்
காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்.பி., கவர்னரின் செயலர் மணிகண்டன், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், புதுச்சேரி நீதிமன்றத் தனி அதிகாரியும் கூடுதல் சார்பு நீதிபதியுமான சவுந்தர்யா, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் அய்யப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
முன்பதிவு செய்திருந்த பெற்றோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வரிசையாக வந்து வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு குழந்தையின் முறையும் நெருங்க நெருங்க, பெற்றோரின் முகங்களில் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் போட்டிபோட்டுப் பிரதிபலித்தன.
மழலைகளின் முதல் அடி
குழந்தைகளைத் தங்களது மடியில் அமர வைத்த சிறப்பு விருந்தினர்களும் பெற்றோரும், அவர்களின் பிஞ்சு விரல்களை அன்புடன் பிடித்து, நெல்மணிகளில் முதல் எழுத்துகளை எழுதச் செய்தனர். தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளில், மழலைகளின் விரல்கள் மெதுவாக நகர்ந்தன. அ... ஆ... எனத் தமிழின் முதல் எழுத்துகள் ஒவ்வொன்றாகப் பதிந்தபோது, குழந்தைகளின் கல்விப் பயணத்துக்கான முதல் அத்தியாயம் அங்கே தொடங்கியது.
வாழ்த்து மழை
எழுத்துகளின் பொருள் அறியாத வயது... ஆனால், வாழ்க்கையின் மிக முக்கியமான பயணத்துக்கான முதல் படி. அந்தப் பிஞ்சு விரல்களைப் பிடித்து எழுத்துகளை எழுத வைத்த சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்தினர்.
மலர்ந்த புன்னகை
குழந்தைகளின் விரல்கள் நெல்மணிகளில் எழுத்துகளைப் பதித்த அந்தக் கணம், பெற்றோருக்கு வெறும் நிகழ்வாக மட்டும் அமையவில்லை. தங்களது குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளுக்கு அச்சாரமிடும் அழகிய தருணமாகவும் அமைந்தது.
சில குழந்தைகள் ஆர்வத்துடன் எழுத்துகளை எழுதின. சில மழலைகளோ சுற்றிலும் இருந்தவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தபடி, பெரியவர்களின் விரல் பிடித்து எழுத்துகளைப் பதித்தன. ஒவ்வொரு குழந்தையின் முதல் எழுத்தும், அங்கிருந்தவர்களின் முகங்களில் புன்னகையை மலரச் செய்தது.
நெகிழ்ந்த குடும்பங்கள்
தங்களது குழந்தைகள் முதன்முதலாக அரிச்சுவடி எழுதுவதை நேரில் கண்ட பெற்றோர், தாத்தா, பாட்டிகள் மற்றும் உறவினர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். நேற்றுவரை வீட்டில் தவழ்ந்து விளையாடிய குழந்தை... இன்று கல்விப் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கிறது. அந்த வளர்ச்சியின் அழகிய தருணத்தைக் கண்முன்னே கண்ட பெற்றோரின் உள்ளங்களில் பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்கின.
குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் நெல்மணிகளில் எழுத்துகளைப் பதித்தபோது, சில பெற்றோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. தங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் கல்வியிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற கனவுகள், அந்த நொடியில் அவர்களின் மனங்களில் மீண்டும் மலர்ந்தன.
நினைவு பொக்கிஷம்
குழந்தைகளின் முதல் எழுத்தைக் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த தாத்தா, பாட்டிகளும் உறவினர்களும், அந்த அழகிய தருணத்தைக் கண்டு பூரித்தனர். தங்களது குடும்பத்தின் அடுத்த தலைமுறை கல்விப் பயணத்தைத் தொடங்குவதைக் காண்பது அவர்களுக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது.
இந்த இனிய தருணத்தைத் தவறவிட விரும்பாத பெற்றோர், மொபைல் போன்களில் புகைப்படங்களாகவும் வீடியோக்களுக்காக பதிவு செய்தனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின்னரும், இந்த முதல் எழுத்தின் நினைவுகளை மீண்டும் பார்த்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில், ஒவ்வொரு நொடியையும் நினைவுப் பொக்கிஷமாகப் பாதுகாத்தனர்.
ஒரு பக்கம் பிஞ்சு விரல்களில் அரிச்சுவடி... மறுபக்கம் பெற்றோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்... சுற்றிலும் உறவுகளின் வாழ்த்துகள்... என, தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி உணர்ச்சிகளின் சங்கமமாக அமைந்தது.
மழலைகளின் கல்விப் பயணத்துக்கு இனிய தொடக்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு முதல் எழுத்தைக் கற்றுக்கொடுத்ததுடன், பெற்றோரின் மனங்களில் என்றும் அழியாத நினைவுகளையும் விதைத்தது.
பெற்றோர் பாராட்டு
கல்விகோவிலுக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள தங்களது குட்டி குழந்தைகளுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கடாச்சம் முழுமையாக கிடைக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்ததோடு, தினமலர் நாளிதழ் தொடர்ந்து ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் விடை பெற்றனர்.
