UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 08:01 AM
புதுச்சேரி :
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தயாரித்த இயற்பியல் சார்ந்த விளையாட்டு பொம்மைகள், கிறிஸ்துமஸ் பரிசாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவ, மாணவியர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்தி இயற்பியல் சார்ந்து விமானங்கள், ரேஸ் கார்கள், கை வண்டிகள் போன்ற பொம்மைகளை உருவாக்கினர். அதன் செயல்முறை விளக்கம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
தொடர்ந்து, பொம்மைகள் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் தலைமை தாங்கினார். இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம், நுண்கலை ஆசிரியர் இளமுருகன் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, மாணவர்கள் தயார் செய்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வழங்கினார்.