படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜன 22, 2026 10:45 AM
ADDED : ஜன 22, 2026 10:50 AM

கள்ளக்குறிச்சி:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து கடந்த டிச., 31 தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் வரும் மார்ச் 31ம் தேதி, 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மாதந்தோறும் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவருக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.300, மேல்நிலை தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000ம் வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்; அல்லது https://employmentexchange.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படாது. மனுதாரர்கள் விண்ணப்பங்களை வரும் மார்ச் 31 வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

