தவமாய் தவமிருக்கும் புத்தகங்கள் வரவுக்கு காத்திருக்கும் கண்கள்
தவமாய் தவமிருக்கும் புத்தகங்கள் வரவுக்கு காத்திருக்கும் கண்கள்
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 07:04 PM

ஒரு பறவையோடு 10 நாட்கள் பழகினால், 11வது நாள் நீங்கள் பறவையாகி விட முடியாது. ஒரு நதியோடு 10 நாட்கள் பயணித்தால், 11வது நாள், நீங்கள் நதியாக மாறி விட முடியாது. ஆனால், ஒரு புத்தகத்தை 10 நாட்கள் வாசித்து பாருங்கள்... 11வது நாள், நீங்களே ஒரு புத்தகமாக மாறி விடுவீர்கள்!
புத்தகங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும் என்பது ஒற்றை வரி. அதனுள் நுழைந்தால், மாறும் உங்கள் முகவரி. ஏ.ஐ., தொழில்நுட்பம் என்ற அளவுக்கு, அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில், உலகம் கைக்குள் அடங்கி விட்டது போன்ற உணர்வு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாசகம், மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்று மாறும் அளவுக்கு, தெரியாத தகவல் அறிந்து கொள்ள, கூகுள் தட்டினால் போதும். இது, இப்போதைய மாற்றம் தான். சற்று பின்னோக்கி பார்த்தால், புத்தகத்தின் தாளை புரட்டும் போது, படிப்புக்கும் சரி, புத்தகங்கள்தான் துணை நின்றிருக்கின்றன. விலையை பார்த்து, புதிய புத்தகங்கள் வாங்க முடியாவிட்டால், நாங்க இருக்கோம் வாங்க பாஸ் என்று அழைப்பு விடுக்கிறது, உக்கடம் பழைய புத்தக மார்க்கெட்.
கடை உரிமையாளர்களான பைசல், ராஜா ஆகியோர் கூறியதாவது:
குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் முதல், பள்ளி, கல்லுாரி, போட்டி தேர்வுகளுக்கு என, அனைத்து விதமான புத்தகங்களும் இங்கு உண்டு. இப்போதெல்லாம், ஆன்-லைனில் சலுகை விலையில், புத்தகங்கள் கொடுக்க துவங்கிவிட்டனர்.
கல்லுாரிகளில் கூட, பி.டி.எப்., வடிவில் பாடங்களை, மாணவர்களுக்கு வழங்கி விடுகின்றனர். பழைய புத்தக மார்க்கெட்டில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. தற்போது, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. தேடல் உள்ளவர்கள் எங்களை தேடி வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.