ஆடு மேய்ப்பவர் மகன் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
ஆடு மேய்ப்பவர் மகன் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
UPDATED : ஏப் 25, 2025 12:00 AM
ADDED : ஏப் 25, 2025 06:27 PM
பெலகாவி: 
பெலகாவியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரின் மகன் யு.பி.எஸ்.சி., தேர்வில் 910வது ரேங்க் எடுத்து, பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகளை நிரப்புவதற்காக நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், கர்நாடகாவை சேர்ந்த 13 பேர், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில், பெலகாவியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரின் மகன், தேசிய அளவில் 910வது ரேங்க் எடுத்துள்ளார்.
பெலகாவி மாவட்டம், யரகடியின் கோடிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்தப்பா எல்லப்பா நந்தி. இவரது தந்தை எல்லப்பா, ஆடு மேய்க்கிறார். தாயார் காலவ்வா, மனைவி யசோதா, சகோதரர் ஆனந்த்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா. இவரது தந்தையும், சகோதரனும் விவசாயம் செய்தனர். ஆடுகளை மேய்த்து வந்தனர். இவரின் தாய் அவர்களுக்கு உதவி வந்தார்.
யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஹனுமந்தப்பா கூறியதாவது:
ட்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில், கே.பி.எஸ்.சி., முக்கிய தேர்வுக்கு தயாராகி வருகிறேன். என் சாதனையை பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன்.
எனக்கு உதவிய நண்பர்களை என்றும் மறக்கமாட்டேன். நான் கல்லுாரியில் படிக்கும்போது, விடுதி வார்டன் எஸ்.கே.பாட்டீல், யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு உதவினார். அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.
ஏழைகள், சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இந்திய ரயில்வே அல்லது இந்திய வருவாய் சேவையில் உயர்பதவி கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு எந்த பதவி கொடுத்தால், நேர்மையாக பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோடிவாலாவில் உள்ள அரசு உயர் பிரைமரி பள்ளியில் 7ம் வகுப்பு வரையிலும்; சட்டிகேரியில் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரையிலும்; தார்வாட் கே.சி.டி., கல்லுாரியில் பி.யு.சி.,யும்; பெலகாவி கல்லுாரியில் பி.இ., மெக்கானிக் பட்டமும் பெற்றுள்ளார்.
இவரை போன்று, கர்நாடகாவை சேர்ந்த ரங்கமஞ்சு 24வது இடமும்; சச்சின் ஹரிஹர் 41, அனுபிரியா சக்யா 120; மேகனா 425; மாதவி 446. பாரத் யாராம் 567; பானுபிரகாஷ் 523; நிகில் 724; விஜய்குமார் 894; விசாகா கதம் 962; சந்தீப் சிங் 981; மோகன் பாட்டீல் 984வது ரேங்க் பிடித்து, மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

