விளையாட்டு மைதானங்கள் இல்லாத அரசுப்பள்ளிகள் பயிற்சியின்றி பாதை மாறும் மாணவர்கள்
விளையாட்டு மைதானங்கள் இல்லாத அரசுப்பள்ளிகள் பயிற்சியின்றி பாதை மாறும் மாணவர்கள்
UPDATED : மே 13, 2025 12:00 AM
ADDED : மே 13, 2025 10:18 AM

தேனி :
மாவட்டத்தில் பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் மாவட்ட, மாநில போட்டிகளில் பயிற்சி இன்றி மாணவர்கள் பங்கேற்கும் அவல நிலை உள்ளது.
தமிழக அரசு மாவட்ட, மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்காக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு போட்டிகள், முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளில் குறைந்த அளவே அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் நிலை உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் சொற்பமே.
மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் 36, மேல்நிலைப்பள்ளிகள் 70 செயல்படுகின்றன. இங்கு சுமார் 15ஆயிரம் மாணவர்கள் வரை படிக்கின்றனர். இதில் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை.
சில பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. மைதானங்கள் இல்லாத பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பு என்பது கானல் நீராகவே உள்ளது.
இதனால் விளையாட்டுகளில் ஆர்வமின்றி மாணவர்கள் அலைபேசி, போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை தொடர்கிறது.
மைதானங்கள் இல்லாத அரசு பள்ளிகளில் மைதானங்கள் ஏற்படுத்தி, மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.