சென்னை ஐ.ஐ.டி., மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை
சென்னை ஐ.ஐ.டி., மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை
UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 04:46 PM

சென்னை:
சென்னையில் ஐ.ஐ.டி.,யில் நடந்த பிளேஸ்மென்ட்டில் ஆண்டுக்கு ரூ.4.30 கோடி ஊதியத்தில் மாணவர் ஒருவருக்கு வேலை கிடைத்துள்ளது. இது சென்னை ஐ.ஐ.டி.,வரலாற்றில் அதிகபட்ச ஊதியமாகும்.
டில்லி, மும்பை, கோரக்பூர், கவுகாத்தி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பிளேஸ்மென்ட் (PLACEMENT) தொடங்கியுள்ளது. உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், கேபிடல் ஒன், குவாண்ட் பாக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
அந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த பிளேஸ்மென்டில், மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி (மாதம் ரூ.35.8 லட்சம்) சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில், படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர் ஒருவருக்கு, வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இது தான்.
இவர், அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தின் அங்கமான ஜேன் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனத்தால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் ஹாங்காங் பிரிவில் பணி அமர்த்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாணவரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சாப்ட்வேர், வங்கி, பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சார்பிலும் ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9 மாணவர்கள் வெளிநாடுகளின் சலுகைகளை பெற்றுள்ளனர்.