குழந்தைகளுக்கு தொழுநோய் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை ஆய்வில் அதிர்ச்சி
குழந்தைகளுக்கு தொழுநோய் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை ஆய்வில் அதிர்ச்சி
UPDATED : டிச 18, 2025 08:00 AM
ADDED : டிச 18, 2025 08:01 AM

சென்னை:
சென்னையில் தொழுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துள்ளதாக, பொது சுகாதாரத் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்ட தொழுநோய் பாதிப்புகள் குறித்த ஆய்வை செய்தது.
அதன்படி சுகாதாரத் துறை நிபுணர்கள் ஸ்ரீதேவி கோவிந்தராஜன், வசந்தி தங்கசாமி, தர்மலிங்கம் வேதநாயகம் ஆகியோர் அந்த ஆய்வை செய்தனர். அதில், 515 பேருக்கு, புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை புதிய பாதிப்புகளின் விகிதம், தேசிய சராசரியைவிட குறைவாகவே உள்ளது. அதேநேரம், பெருநகரங்களிலும், குறிப்பாக சென்னையிலும் அந்நோய் பரவலை ஒழிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன.
மாநிலத்தின் சராசரி தொழுநோய் பாதிப்பைவிட சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு விகிதம், அதிகமாக உள்ளது.
சென்னையில், ஐந்து ஆண்டுகளில், 515 புதிய தொழுநோயாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். கடந்த, 2020 - 21ல் லட்சத்தில் 1.0 ஆக இருந்த தொழுநோய் பாதிப்பு விகிதம், 2024 - 25ல் 1.3 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2022 - 23ல், 2 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தது.
குழந்தைகளிடையே ஏற்படும் தொழுநோய் பாதிப்பை பொறுத்தவரை, அந்த காலகட்டத்தில் லட்சத்தில் 3.5 முதல் 11.5 சதவீதம் வரை இருந்தது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில், இந்த பாதிப்பு காணப்படுகிறது.
இதில் பெரும்பாலானோருக்கு குடும்பத்தினரிடமிருந்தோ, அண்டை வீட்டினரிடம் இருந்தோ பரவவில்லை. புலம்பெயர்ந்தவர்கள் வாயிலாக இந்நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகக்கிப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழுநோய் எப்படி பரவும்?
'மைக்கோபாக்டீரியம் லெப்ரே' என்ற பாக்டீரியா கிருமியால் தொழுநோய் ஏற்படுகிறது. அந்த தொற்று பாதித்த நபரின் இருமல் மற்றும் தும்மலில் இருந்து வெளியேறும் நீர்த் திவலைகளில் இருந்து பிறருக்கு பரவுகிறது. அக்கிருமி, ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்த ஐந்தில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம். நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது, ஒருவருக்கு இந்நோய் வெளிப்படத் துவங்கும். ஆரம்பத்தில் சருமத்தின் சில இடங்களில் நிறமிழப்பும், உணர்விழப்பும் ஏற்படும். அந்த கட்டத்திலேயே தொழுநோயைக் கண்டறிந்து, கூட்டு மருந்து சிகிச்சை அளித்தால், 100 சதவீதம் பாதிப்பை குணப்படுத்த முடியும். அலட்சியப்படுத்தினால், தோல் மற்றும் நரம்புகளை பாதிப்பதுடன் கண், கை, பாதங்களில் குறைபாடுகள் உள்ளிட்டவை ஏற்படும் என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

