UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 08:20 AM
திருவொற்றியூர்:
பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் செல்லும் தடம் எண்: 101 மாநகர பேருந்தில், சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, கல்லுாரி மாணவர்கள் 11 பேர் ஏறினர்.
அவர்கள், ஆபாச பாடல்கள் பாடியபடி, பயணிருக்கு தொந்தரவுகொடுத்துள்ளனர். ஆனால், அவர்களது அட்டூழியம் தொடர்ந்ததையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் தயாராக நின்றிருந்த போலீசார், பேருந்தின் தானியங்கி கதவை மூடி, அட்டகாச மாணவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து, 2 மற்றும் ஒன்றரை அடியில் பட்டாக்கத்திகள் சிக்கின.
போலீசார், 11 மாணவர்களையும், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், மாநிலக்கல்லுாரி மாணவர்களான, ஜனகன், 18, குணசேகரன், 19, தீபக்ராஜ், 18, நித்திஷ், 18, பிரதீப், 19, மோகனகிருஷ்ணன், 19, சரண், 20.
மேலும், பொன்னேரி தனியார் கல்லுாரி மாணவர்கள் இஸ்மத், 20, விஜய் சந்தோஷ், 20, மீஞ்சூர்தனியார் கல்லுாரி மாணவர்கள் நீரஜ், 19 மற்றும் 17 வயதுடைய சிறுவன்உட்பட, 11 பேர் என, தெரியவந்தது.
அவர்கள் மீது, பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ், 10 மாணவர்களும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தவிர, 17 வயது சிறுவனின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, கடும் எச்சரிக்கைக்குப் பின், எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.