பள்ளியில் இடமின்றி மாணவியர் அவதி வாசலில் அமர்ந்து பெற்றோர் போராட்டம்
பள்ளியில் இடமின்றி மாணவியர் அவதி வாசலில் அமர்ந்து பெற்றோர் போராட்டம்
UPDATED : ஆக 14, 2024 12:00 AM
ADDED : ஆக 14, 2024 08:21 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே சேக்குப்பேட்டை கவரை தெருவில், ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக, இப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி, வெளியேறாமல் இருப்பதால், மாணவியர் வகுப்பறை வரை செல்ல சிரமம் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்றினாலும், தண்ணீர் முழுதுமாக வெளியேறுவதில்லை.
மேலும், பள்ளி வளாகத்திலேயே, பள்ளியின் கட்டடத்தில், மாவட்ட கல்வி அலுவலகம் இயங்குகிறது. இதனால், வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டு, ஒரே வகுப்பறையில் இடமின்றி, தரையில் அமர வேண்டியள்ளது.
இந்நிலையில், பெற்றோர் சிலர், பள்ளி வாசலில் நேற்று அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, வரும் 15ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அலுவலகத்தை காலி செய்வதாக கூறியதை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.