UPDATED : ஆக 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 22ம் தேதி நடந்தது.
அனைத்துப் பாடங்களுக்கான ஆசிரியர்களும் ஒரே நாளில், ஒரே மையத்திற்கு அழைக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அவர்களுடன் துணைக்கு வந்த குடும்பத்தினர் என பெரிய கூட்டமே பள்ளியில் கூடியது. கவுன்சிலிங் நடத்துவதற்கு, எந்தவிதமான அடிப்படை ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்யவில்லை.
பாட வாரியான காலியிட பட்டியல்களை, கவுன்சிலிங் மையத்திற்கு வெளியே ஆசிரியர்களுக்கு தெரியும் வகையில் ஒட்டியிருக்க வேண்டும். கணிதப் பாடத்திற்கான காலியிட பட்டியலை மட்டும் ஒட்டியிருந்தனர். வேதியியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான காலியிட பட்டியலை, கவுன்சிலிங் நடைபெறும் மையத்திற்கு உள்ளேயே ஒட்டினர்.
இப்படி ஒவ்வொரு பாடத்திற்கான காலியிட பட்டியல்களை ஒவ்வொரு இடத்தில் ஒட்டியிருந்தனர். அது குறித்த எந்தவிதமான தகவல்களையும் பள்ளியின் நுழைவாயிலில் தெரிவிக்கவில்லை. இதனால் காலியிட பட்டியல் ஒட்டும்போது, அது எந்த பாடத்திற்கு என்று தெரியாமல் அனைத்துப் பாடங்களைச் சேர்ந்தவர்களும் முட்டி மோதி பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
‘மைக்’ வசதி செய்து, கவுன்சிலிங் குறித்த முக்கிய அறிவிப்புகளை, அனைவரும் கேட்கும் வகையில் செய்திருக்க வேண்டும். இதையும் செய்யவில்லை. ஆசிரியர்களுடன் வந்தவர்கள் உட்காருவதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை. அதனால் கவுன்சிலிங் மையத்திற்குள், ஆசிரியர்களுடன் குடும்பத்தினர்களும் படையெடுத்ததால் ஒரே குழப்பமான நிலை ஏற்பட்டது.
அனைத்து பாட ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கும், பள்ளியின் உள் விளையாட்டு அரங்கில் மட்டும் நடத்துவதற்கு அதிகாரிகள் எப்படி முடிவு செய்தனர் என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பல பாடங்களின் ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தும் அளவிற்கு ஆடிட்டோரியத்தில் இடவசதி இல்லை.
ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடத்துவதற்கு ஏற்ற அதிகாரிகளோ, இதர பணியாளர்களோ இல்லாததால், யார் யாரை தொடர்புக்கொள்வது என்ற தகவல் தெரியாமல் ஆசிரியர்கள் அல்லாடினர்.
இந்த குளறுபடிகளுக்கெல்லாம் உச்சகட்டமாக, கவுன்சிலிங் மையத்திற்கு பக்கத்திலேயே பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் பயங்கர சத்தத்துடன் நடந்துக்கொண்டிருந்தது. விளையாட்டு தின விழா என்பதால் மாணவர்கள், பெற்றோர்கள் என்று திரண்டதால் அவர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
அமைதியாக, வெளிப்படையாக, ஆசிரியர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் நடத்த வேண்டிய கவுன்சிலிங் நிகழ்ச்சி, துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சந்தையைப் போல் படு இரைச்சலாக நடந்தது.
மாவட்ட வாரியாக உள்ள காலியிடங்கள் பூர்த்தியாகும் போது, மீதமுள்ள காலியிட விவரங்கள் ஆசிரியர்களுக்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரை பயன்படுத்தி ‘ஸ்கிரீன்’ மூலம் காலியிட விவரங்கள் தெளிவாக ஆசிரியர்களுக்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இப்படி எதையுமே செய்யாமல், நாங்களும் கவுன்சிலிங் நடத்துகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் செய்த கொடுமையில் ஆசிரியர்கள் சிக்கித் தவித்தது தான் மிச்சம்.

