சிறப்பு பொருளாதார மண்டலங்களால் 8 லட்சம் வேலைவாய்ப்புகள்
சிறப்பு பொருளாதார மண்டலங்களால் 8 லட்சம் வேலைவாய்ப்புகள்
UPDATED : ஆக 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: ‘சிறப்பு பொருளாதார மண்டலங்களால் அடுத்த ஆண்டில் எட்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்’ என, மத்திய வர்த்தகத் துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
மகாராஷ்டிர பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றுக்கு டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தரங்கில் பேசிய பிள்ளை கூறியதாவது:
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செய்யப்படும் முதலீடு, 2009ம் ஆண்டில் இரண்டு லட்சம் கோடி ரூபாயை எட்டி விடும். அதனால், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படும்.
தற்போது, ஆண்டு ஒன்றுக்கு 2.15 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அடுத்த ஆண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம், எட்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செய்யப்படும் முதலீடு, தற்போது 77 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அடுத்த ஆண்டில் இது இரண்டு லட்சம் கோடியை எட்டும்.
தொழிற்சாலைகள் அமைக்க தற்போது பெரிய அளவில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன. 2007 - 08ம் ஆண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் நடந்த ஏற்றுமதி, 66 ஆயிரத்து 650 கோடி. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 92 சதவீதம் அதிகம். இவ்வாறு பிள்ளை கூறினார்.

