வேளாண் பல்கலை மாணவர்கள் கனடாவில் 6 மாதம் ஆராய்ச்சி
வேளாண் பல்கலை மாணவர்கள் கனடாவில் 6 மாதம் ஆராய்ச்சி
UPDATED : செப் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
வேளாண் பல்கலையின் முதுகலைக் கல்வித்துறை முதல்வர் சந்திரபாபு கூறியதாவது:
கனடா நாட்டின் பன்னாட்டு கல்விக்குழு, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் பரமேஸ்வரி, ஷினோஜ் சுப்பிரமணியன், சன்ஜீவா காந்தி, சில்வாஸ் ஜெபக்குமார் பிரின்ஸ் ஆகிய நான்கு மாணவர்களுக்கு ‘பட்டப்படிப்பு மாணவர்கள் பரிமாற்ற திட்ட கல்வி உதவித்தொகை’யாக ரூ. 16.40 லட்சம் வழங்கியுள்ளது.
இந்த மாணவர்கள், கனடாவில் உள்ள ‘சஸ்கட்சுவன்’ பல்கலையில் ஆறு மாதம் ஆராய்ச்சியில் ஈடுபடுவர்.
நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவு நீரை சுத்திகரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் மாணவி பரமேஸ்வரி. கழிவு நீரில் உள்ள கன உலோகம், ஊட்டச்சத்து, சைனைடு, கரிமப்பொருள், பாசி, வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி, எதிர் கொல்லி உள்ளிட்டவை நீரில் உள்ள மாசு, நச்சு மற்றும் நுண்ணுயிரியை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இணைதிறன் பூஜ்ஜியம் உள்ள நானோ நுண் துகள்களைக் கொண்டு மாசுக்களை கட்டுப்படுத்தும் முறை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை; பொருளாதார சிக்கனமும் உள்ளது. இந்த ஆராய்ச்சி கழிவு நீரை சுத்திகரிப்பதில் கவனம் செலுத்தும்.
வேகவைக்கப்பட்ட எண்ணெய் பனைக்குலையின் நார்களில் இருந்து எளிதாக மட்கக்கூடிய பாதுகாப்பான் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் மாணவர் ஷினோஜ் சுப்பிரமணியன். பனை குலைகளை எரிப்பதால், காற்று மாசடைகிறது. வேகவைக்கப்பட்ட கழிவுகளில் இயற்கை நார் பொருட்கள் அதிகம் உள்ளன.
இவை பிற மரங்களில் இருந்து கிடைக்கும் நார்களை விட சுத்தமானவை; எளிதில் மட்கக்கூடியவை. இந்த நார்ப்பொருட்களை பயன்படுத்துவதால், உற்பத்தியாளர்கள் லாபம் ஈட்டமுடியும். இவரின் ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பான்கள், சர்வதேச தரக்கட்டுப்பாட்டின் கீழ் சஸ்கட்சுவன் பல்கலையில் பரிசோதிக்கப்படவுள்ளன.
ஆலைக்கழிவு நீரை சுத்திகரிக்க, ஒளிவினை ஊக்கி உலையை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் மாணவர் சன்ஜீவா காந்தி. பொதுவாக வினைஊக்கி ஒளியின் முன்னிலையில் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களை உற்பத்தி செய்கின்றன.
இதனால், கழிவுநீரில் உள்ள மாசுக்கள் ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் அடைந்து மாசு குறைகிறது. டைட்டேனியம் ஆக்ஸைடு எனப்படும் நானோ வடிவ படிகம் சிறந்த வினை ஊக்கியாக செயல்படுகிறது. இந்த முறையில் ஆலைக்கழிவு நீரை சுத்தம் செய்ய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயிர்களில் ‘ராப்-5’ மரபணுவின் மூலம் வறட்சியைத் தாங்கி வளரும் திறனை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் மாணவர் சில்வாஸ் ஜெயக்குமார் பிரின்ஸ்.
மானாவாரி நிலங்களில் பயிர்களின் மகசூலை மேம்படுத்த வறட்சியை தாங்கும் பயிர் ரகங்களை உருவாக்குவது அவசியம்.கோரைப்புல்லில் காணப்படும் ‘ராப் 5’ என்ற மரபணு, மானாவாரி பயிர்களுக்கு அதிக வீரியம் மற்றும் மகசூலைத் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபணுவை அதிக மகசூல் தரும் நெல் ரகங்களில் மரபணு மாற்றம் செய்து, அதன் விளைவுகளை கண்டறிவது ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம்.
இந்த நான்கு மாணவர்களும், கோவை வேளாண் பல்கலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதத்தில் இருந்து ஒவ்வொருவராக கனடாவுக்கு செல்வர். அங்கு ஆறு மாதம் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். இவ்வாறு வேளாண் பல்கலையின் முதுகலைக் கல்வித்துறை முதல்வர் சந்திரபாபு கூறினார்.

