UPDATED : செப் 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பல்லாவரம்: பல்லாவரத்தில் உள்ள, தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளியால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்களை அவரவர் பெற்றோர் அழைத்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பெரும்பாலான பள்ளிகள் செப்., 5ம் தேதி இயங்கவில்லை.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி, காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு செப்., 4ம் தேதி காலை 8.30 மணிக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் நபர், ‘உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்’ என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து, சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையில் பீதியில் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வெளியே அழுது கொண்டே நின்றனர்.
தகவலறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். தனியார் பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் அப்பகுதியில் பரவியது. இதனால் குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அவரவர் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
மாணவர்கள் சென்றுவிட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நாகல்கேணி தனியார் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் பொது தொலைபேசியில் இருந்து மிரட்டல் விடுத்த நபர் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விடுமுறைக்காக மாணவர்கள் யாரேனும் விளையாட்டிற்காக போன் செய்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

