21 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி வழங்குகிறார்
21 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி வழங்குகிறார்
UPDATED : செப் 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 21 ஆசிரியர்கள் உட்பட 320 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இந்த விருதுகளை வழங்குகிறார்.
சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களை கவுரவப்படுத்தும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினத்தன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான தேசிய விருது, புதுடில்லியில் செப்., 5ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 320 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குகிறார்.
இதில் அதிகப்படியாக, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 28 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 ஆசிரியர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 21 ஆசிரியர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது. மொத்தமுள்ள 320 ஆசிரியர்களில் 82 பேர் பெண்கள்.
தேசிய விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பிரதமருடன் சந்திப்பு: தேசிய விருது பெறவுள்ள ஆசிரியர்கள், புதுடில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது ஆசிரியர்களிடையே பிரதமர் பேசியதாவது: இந்தியாவின் கலாசார மரபுகளைப் பின்பற்றி நடக்கும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் வகுப்பறைகளில் நாம் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் ஆசிரியர்களின் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களும் புதிய விஷயங்களைப் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ளமுடியும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

