தரம் குறையும் மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி?
தரம் குறையும் மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி?
UPDATED : மார் 20, 2013 12:00 AM
ADDED : மார் 20, 2013 02:28 PM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்க கூடுதல் இயக்குனராக, சமூக அறிவியல் துறை பேராசிரியர் பெரியகருப்பன், நேற்று நியமிக்கப்பட்டார். தற்போதுள்ள இயக்குனர் மீது பல்வேறு புகார் எழுந்ததால் தான் அப்பதவியை "டம்மி" யாக்கும் நடவடிக்கையாக கூடுதல் இயக்குனர் பணியிடம் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்பல்கலை தொலைநிலை கல்வி இயக்கக பிரிவில், 112 படிப்புகளில் 1.26 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். பல்கலைக்கு வருவாய் தரும் முக்கிய பிரிவு இது. துபாய், மலேசியா, டெக்ரான், மஸ்கட் உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் தொலைநிலை கல்விக்கான கல்வி மையங்கள் உள்ளன. ஆனால், இப்பிரிவில் பல ஆண்டுகளாக குறிப்பிடும் வகையில் புது படிப்புகள் அறிமுகப்படுத்தவில்லை. இதனால், இப்பிரிவின் வருவாயும் குறைவதாக பேராசிரியர்கள் ஆதங்கத்தில் இருந்தனர்.
தொலைநிலை கல்வி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்களும், துணைவேந்தர், உயர்கல்வி துறை அதிகாரிகளுக்கு சென்றன. இதையடுத்து, அந்த இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்து பேராசிரியர் குழு ஆய்வு செய்து, துணைவேந்தருக்கும் அறிக்கை தாக்கல் செய்தது. முதற்கட்ட நடவடிக்கையாக, இயக்குனர் பதவியை "டம்மி" யாக்கும் நோக்கில், இப்பிரிவிற்கு கூடுதல் இயக்குனரை துணைவேந்தர் நியமித்துள்ளார்.
துணைவேந்தர் கல்யாணி கூறுகையில், "தொலைநிலை கல்வியை மேம்படுத்த, நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள இயக்குனரின் பணி திருப்தி அளிக்கவில்லை. புதிய படிப்புகள் அறிமுகம் காரணமாக, கூடுதல் பணிகளை சமாளிக்கவும், கூடுதல் இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்&'&' என்றார்.
