காந்தி கிராம பல்கலை துணைவேந்தருக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு
காந்தி கிராம பல்கலை துணைவேந்தருக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு
UPDATED : ஏப் 02, 2013 12:00 AM
ADDED : ஏப் 02, 2013 07:41 AM
காந்தி கிராமம்: காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமிக்கு, மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஏப்ரலில், காந்திகிராம பல்கலை துணைவேந்தராக எஸ்.எம்., ராமசாமி, நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். 2012ல் தலா ஆறு மாதங்கள் வீதம் இருமுறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. நீட்டிப்பு செய்யப்பட்ட பதவிக்காலம் முடிவடைவதால், மார்ச் 31ல் அவர் பணிநிறைவு செய்வார் எனவும், பல்கலை மானிய குழுவின் புதிய விதிமுறைகளின்படி மூத்த புல தலைவர் துணைவேந்தர் பொறுப்பை வகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை துணைவேந்தருக்கு பிரிவுபச்சார விழா நடத்த பல்கலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், எஸ்.எம். ராமசாமிக்கு, 65, மேலும் ஆறுமாத காலத்திற்கு துணைவேந்தர் பதவி நீட்டிப்பு வழங்க மத்திய மனித வளத்துறை அமைச்சகம், பல்கலை வேந்தருக்கு உத்தரவிட்ட கடிதத்தின் நகல் பல்கலைக்கு வந்தது. இதையடுத்து பிரிவுபச்சார விழா ரத்து செய்யப்பட்டது.
வேந்தர் ரீனா ஜாப்வாலா பிறப்பித்த உத்தரவு கிடைத்ததும், துணைவேந்தர் பதவி ஆறு மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட தகவலை பதிவாளர் நாராயணசாமி நேற்று, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
