பிளஸ் 2 கணித வினாத்தாள் குளறுபடி: வழக்கை முடித்தது உயர்நீதிமன்றம்
பிளஸ் 2 கணித வினாத்தாள் குளறுபடி: வழக்கை முடித்தது உயர்நீதிமன்றம்
UPDATED : ஏப் 17, 2013 12:00 AM
ADDED : ஏப் 17, 2013 09:54 AM
மதுரை எம்.கே.புரம் ராமலிங்கம் தாக்கல் செய்த பொதுநல மனு: பிளஸ் 2 கணித தேர்வில், புத்தகக்குழுவின் மாதிரி "புளூபிரின்"டிற்கு எதிராக வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அறிவை சோதிக்கும் வகையில் பகுதி "ஏ"யில் 10, "பி"யில் 5, "சி"யில் 3 கேள்விகள் இடம்பெற வேண்டும்.
புரிந்து விடையளிக்கும் வகையில் பகுதி "ஏ"யில் 8, "பி" மற்றும் "சி"யில் தலா 3 கேள்விகள், செயல்திறனை சோதிக்க பகுதி "ஏ"யில் 16, "பி" மற்றும் "சி"யில் தலா 6 கேள்விகள் இடம்பெற வேண்டும். திறனை சோதிக்கும் வகையில் பகுதி "ஏ"யில் 6, "பி"யில் 1, "சி"யில் 3 கேள்விகள் அமைய வேண்டும்.
உயர்நிலை குழு அமைத்து, கணித வினாத்தாளை ஆய்வு செய்ய வேண்டும்; மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி பதில் மனு:
மாணவர்களின் அறிவு, திறன், புரிதல், செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புளூபிரின்ட் அடிப்படையில்தான் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது 55 மையங்களில், 6500 ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புளூ பிரின்ட்படி, திருத்துவதற்கு விடைகள் வழங்கப்பட்டுள்ளன. பத்தி 9: தேர்வு முடிந்ததும் நான்கு புகார்கள் வந்தன. மனுதாரரை தவிர, பிற புகார்களில் "புளூபிரின்ட்" படி வினாத்தாள் தயாரிக்கவில்லை என குறிப்பிடவில்லை. இரண்டு புகார்கள் ஏற்கும்படி இருந்தன.
வினா 13 (கோடு- ஏ)விற்குரிய விடையை ""சிஐஎஸ்&'&' என இணைத்து அச்சிடுவதற்கு பதிலாக ""சி ஐஎஸ்&'&' என பிரித்து அச்சிட்டுள்ளனர். இதற்கு 2 அல்லது 4 வது பதிலை எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்க குழு பரித்துரைத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வினியோகிக்கப்பட்ட வினாத்தாளில், மைனஸ் குறிகள் சரியாக தெரியவில்லை. மற்ற மையங்களில் புகார்கள் இல்லை. வினா 41 க்கு மைனஸ் (-) 5 என்பதற்கு பதிலாக 5 என விடையளித்திருந்தாலும், மதிப்பெண் வழங்கப்படும். இப்பிரச்னை ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது.
நீதிபதிகள், "பத்தி 9 ல் குறிப்பிடப்பட்டுள்ளதை இக்கோர்ட் பதிவு செய்து கொள்கிறது. மனு முடிக்கப்படுகிறது," என்றனர்.
