UPDATED : ஏப் 17, 2013 12:00 AM
ADDED : ஏப் 17, 2013 11:01 AM
திட்டக்குடி: திட்டக்குடி தாலுகாவில் பூட்டிக் கிடக்கும் நூலகங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடி தாலுக்காவிற்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களில் 80 சதவீத நூலகங்கள் அனைத்து வசதிகள் இருந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
இந்த நூலகங்களை பராமரிக்க பணியாளர் இல்லாததே நூலகத்தினை திறக்காமல் இருப்பதற்கு காரணமாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். சில ஊராட்சிகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் என உடல்நிலை பாதிப்படைந்து காணப்படுகின்றனர்.
உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அவர்களை நூலக பராமரிப்பு பணியில் ஈடுபடுத்துவது மேலும் அவர்களில் உடல்நிலையை பாதிப்படையச் செய்யும்.
அனைத்து கிராமங்களிலும் படித்த பட்டதாரி ஆண் மற்றும் பெண்கள் வேலையின்றி உள்ளனர். விருப்பமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து நூலகத்தினை பராமரிக்கும் பணியில் அமர்த்தி நூலகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூலகத்தில் பணிபுரியும் இளைஞர்கள் அரசுத்தேர்வுகள் மற்றும் பல்வேறு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், தேர்வுகளுக்கு தயார் செய்யவும் நூலகம் வரப்பிரசாதமாக அமையும். இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நூலகங்களால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடைவதுடன் அரசுப்பணம் வீணாகாமல் பயனுள்ளதாகவும் அமையும்.
