ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனம்: சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனம்: சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM
ADDED : ஜூலை 26, 2013 07:58 AM
சென்னையைச் சேர்ந்தவர், டாக்டர் வசந்தா. காட்பாடியில் உள்ள கல்லூரியில், 1974ல், விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1988ல், சென்னை, ஐ.ஐ.டி.,யில், கணிதத் துறையில், விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1995ல் நடந்த, இணைப் பேராசிரியர் தேர்வை எதிர்த்து, ஐகோர்ட்டில், டாக்டர் வசந்தா மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், "பிற்படுத்தப்பட்டோருக்கு, இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை; இடஒதுக்கீட்டை பின்பற்றாமல், தேர்வு நடந்துள்ளது; இது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; தகுதி பெறாதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இணைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" என, கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: சென்னை, ஐ.ஐ.டி.,யில், 1995ம் ஆண்டு முதல், 2000ம் ஆண்டு வரை நடந்த நியமனங்கள் சரியானவை தானா, சட்டப்படியானது தானா, என்பது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையில், சட்டவிரோதமாக நடந்தது என்பது தெரிய வந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கையை, சி.பி.ஐ., எடுக்க வேண்டும். ஐ.ஐ.டி., இணைப் பேராசிரியராக, கடந்த, 1995, ஜூலை, 27ம் தேதி முதலும், பேராசிரியராக, 1996, டிசம்பர், 18ம் தேதி முதலும், மனுதாரர் நியமிக்கப்பட்டதாக கருத வேண்டும்.
இந்த காலத்துக்கான சம்பளத்தை, எதிர்கால சம்பளத்தை நிர்ணயிக்க, கணக்கிட வேண்டும். கடந்த, 1996ம் ஆண்டு முதல், இப்போது வரை, இணைப் பேராசிரியர் சம்பளத்துக்கான இணையான சம்பளம் மற்றும் அலவன்ஸ், மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
