இளைஞர்கள் தொழிலதிபர்களாக வாய்ப்பு: தொழில் முனைவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன்
இளைஞர்கள் தொழிலதிபர்களாக வாய்ப்பு: தொழில் முனைவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன்
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 11:18 AM
தூத்துக்குடி: தொழில் முனைவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் அதிபர்கள் ஆக வேண்டும் என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு தூத்துக்குடி ராசி மகாலில் கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;
"தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சந்தை வாய்ப்புள்ள உற்பத்தி தொழில் மற்றும் வேலை தொழில்களை துவங்கும் விதமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் வழங்கி புதிய உற்பத்தி சேவை தொழில்களை துவக்க உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் பங்கேற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தகுதியுடையவர்கள்.
இந்த திட்டத்தில் 5 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களை துவங்கி 25 சதவீத மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது 35 ஆகும்.
இதர சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ஆகியோருக்கு 45 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பயன்பெற குறைந்தப்பட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில் சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவின் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவின் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் வருமான வரம்பு எதுவும் கிடையாது. இந்த திட்டத்தில் உரிமையாளர் நிறுவனங்களும், பங்குதாரர் நிறுவனங்களும் பயன்பெற தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீதமும், மகளிர், ஆதரவற்ற விதவைகள், கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக மொத்தம் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடுகளில் தேவையான நபர்கள் இல்லாத பட்சத்தில் இதர பிரிவினர்களில் தகுதியுடையவர்களுடன் கூடிய நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தியக் கூறுகள் உள்ள உற்பத்தி தொழில்களாக பொறியியல் தொழில்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இயந்திரங்களை கொண்டு தானியங்கி வாகன பாகங்கள் உருவாக்குதல், கயிறு தொழில்கள், பிளாஸ்டிக் கயிறு, ஆயத்த ஆடைகள் உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், உணவு பொருட்கள், மசாலா பவுடர் உற்பத்தி, மாவுப் பொருட்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் உற்பத்தி, சிக்கன கட்டுமான பொருட்கள், ஹாலோ பிளாக்குகள், தரைத்தள கற்கள் உற்பத்தி, உணவு எண்ணெய் உற்பத்தி போன்ற உற்பத்தி தொழில்களும், குளிர்பதன கிடங்குகள், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த மென் பொருட்கள் சேவைகள், மருத்துவ தகவல் மற்றும் சந்தை சார்ந்த தகவல் தெரிவித்தல் போன்ற சேவைத் தொழில்களும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொழில் சார்ந்த நிறுவனங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், சூரியசக்தி பயன்பாட்டு உபகரணங்கள் உற்பத்தி உள்ளிட்ட சிறப்பு தொழில்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த திட்டத்திற்கான பயனாளிகள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினரால் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத வேளாண் பயிற்சி 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு பாங்குகள் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு தொழில் துவங்க தேவையான அனுமதிகள், உரிமங்கள் பெற ஏற்பாடு செய்யப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
