தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்: மாணவர்களுக்கு அறிவுரை

தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்: மாணவர்களுக்கு அறிவுரை

தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்: மாணவர்களுக்கு அறிவுரை


UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM

ADDED : ஜூலை 28, 2013 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM ADDED : ஜூலை 28, 2013 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:  "தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்," என, மதுரையில் தொழில், வர்த்தக சங்க "சார்ப் அகடமி" சார்பில் நடந்த கருத்தரங்கில், நடிகர் அஜய் ரத்னம் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கான தன்னம்பிக்கை குறித்து, அவர் பேசியதாவது: மாணவர்கள், "எதையும் தங்களால் சாதிக்க முடியும்" என, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் குத்துவிளக்கு எதற்காக ஏற்றுகிறோம்; அதன் பொருள் என்ன தெரியுமா? விளக்கில் உள்ள, எண்ணெய், திரி, தீ மூன்றையும் சேர்த்து படித்தால், "என்னை திருத்திக் கொள்" என, பொருள் வரும்.

மாணவர்கள், தங்களிடம் உள்ள குறைகளை நீக்கி, ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும் வயதில், படிப்பையும், வேலை பார்க்கும் காலத்தில் வேலையையும் காதலிக்க வேண்டும். மனதை கட்டுப்படுத்தி தினமும் எட்டு மணி நேரம் படித்தால், தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன், முதல் இடத்தைப் பெற்று வெற்றி பெறலாம்.

கற்ற கல்வியை வைத்து, வாழ்வில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். கடினமான செயலை சுலபமாக்குபவனே, அறிவாளி. பல தடைகளைத் தாண்டி, வாழ்வில் வெற்றி பெற்றவர்களை முன் உதாரணமாகக் கொண்டு, நம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணித்தால், வெற்றி நிச்சயம்.

ஒரு கிராமம் மழையில்லாமல் வறண்டு இருந்தது. மக்கள் ஒரு சாமியாரை சந்தித்தனர். அவர், "மழை வரும் வரும் என சொல்லிக் கொண்டேயிருங்கள்" என கூறினார். அதன்படி, மக்கள், "மழை வரும்" என கூறினர். சிறிது நேரத்தில் மழை கொட்டியது. கூட்டத்தில் குடையுடன் நின்ற சிறுவனை கை காட்டிய சாமியார், "மழை வரும் என, குடையுடன் வந்த சிறுவனின் தன்னம்பிக்கை தான், பாராட்டுக்குரியது" என்றார்.

அந்த சிறுவனைப் போல நம்பிக்கையுடன், பொறுமையாகக் காத்திருந்தால், பலன் கிடைப்பது உறுதி. வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சாமாளிக்க, கற்றுக் கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலைகளிலும், கோபப்படாமல் மனதை பக்குவப்படுத்த வேண்டியது அவசியம்.

எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என, தீர்மானிக்கும் திறனை வளர்த்து, வீட்டிற்கும், நாட்டிற்கும், நன்மை செய்து வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us