தினமலர் நடத்திய ஆசிரியர் தேர்வு பயிற்சி முகாமில் மக்கள் வெள்ளம்
தினமலர் நடத்திய ஆசிரியர் தேர்வு பயிற்சி முகாமில் மக்கள் வெள்ளம்
UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM
ADDED : ஜூலை 29, 2013 08:17 AM
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், "ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சியும், பிளஸ் 2 முடிந்து விட்டு, மேற்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, "வழிகாட்டி" நிகழ்ச்சியையும், தினமலர் நாளிதழ் நடத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்நிகழ்ச்சிகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதன் அடுத்தக்கட்டமாக, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் நாளிதழ், இலவச டி.இ.டி., பயிற்சி முகாமை நேற்று நடத்தியது.
தி.நகர், சர்.பி.டி., தியாகராயர் அரங்கில் நடந்த, பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, காலை, 8:00 மணி முதல், ஆசிரியர் பயிற்சி, பி.எட்., முடித்தோர் கூட்டம் அலைமோதியது. அலை கடலென திரண்ட ஆசிரியர்களால், காலை, 10:00 மணியளவில் அரங்கம் நிரம்பியது. இருந்தும், 11:00 மணிக்கும், பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்து கொண்டே இருந்தனர். பலர், அரங்கில் இடம் இல்லாததால், வெளியில் அமர்ந்து, தேர்வு தகவல்களை குறிப்பு எடுத்தனர்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்த ஆலோசனைகளை, மதுரை, "நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங்" பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், ஆங்கில பாடம் குறித்த, எளிய, "டிப்ஸ்"களை, இப்பயிற்சி மைய நிர்வாக அதிகாரி, வெங்கடாஜலபதி வழங்கினர்.
தமிழ் பாடம் குறித்த அறிவுரைகளை, இப்பயிற்சி மைய உதவி பேராசிரியர் கணேசன், உளவியல் குறித்த ஆலோசனைகளை, மதுரை வேலம்மாள் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாஷ் வழங்கினர்.
மேலும், ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி, தேர்வு எழுதுவதற்கான டிப்ஸ், கடந்தாண்டு டி.இ.டி., தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரங்களை விளக்கினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, டி.இ.டி., கடந்தாண்டு வினா தாள் நகல் அடங்கிய, எட்டு பக்க புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில், தேர்வு எழுதுவோர், தங்கள் பாடங்கள் குறித்த சந்தேகங்களுக்கு, துறை நிபுணர்களிடம் விளக்கங்களை பெற்றனர்.
