விடுதி மாணவர்களின் உணவு தயாரிக்க 645 கிரைண்டர்கள் கொள்முதல்
விடுதி மாணவர்களின் உணவு தயாரிக்க 645 கிரைண்டர்கள் கொள்முதல்
UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:30 AM
பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கீழ், 710 விடுதி; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை கீழ், 572 விடுதி; சிறுபான்மை நலத் துறை கீழ், 12 விடுதிகள் செயல்படுகின்றன.
இவ்விடுதிகளில், 80,064 மாணவர் தங்கியுள்ளனர். மாணவர்களின் உணவு தயாரிப்புக்கு பல விடுதிகளில், கிரைண்டர் இல்லாமல் திண்டாடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு, அனைத்து விடுதிகளுக்கும் கிரைண்டர் வழங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.
அதன்படி, 1,000 விடுதிகளுக்கு, கிரைண்டர் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, 645 விடுதிகளுக்கு, கிரைண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பிற்படுத்தப்பட்ட நலத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல விடுதிகளில், கிரைண்டர்கள் இருந்த போதும், அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இதனால், பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 645 கிரைண்டர்களை, கொள்முதல் செய்ய, நலத்துறை முடிவு செய்து உள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இம்மாத இறுதிக்குள், ஒப்பந்தப்புள்ளி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்" என்றார்.
