மாணவர் விடுதிகளில் காப்பாளர்கள் பற்றாக்குறை: மாணவர்களின் பாதுகாப்பு?
மாணவர் விடுதிகளில் காப்பாளர்கள் பற்றாக்குறை: மாணவர்களின் பாதுகாப்பு?
UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM
ADDED : ஜூன் 18, 2014 12:50 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மாணவர் விடுதிகளில் காப்பாளர் பணியிடங்கள், பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
இம்மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு மொத்தம் 60 அரசு விடுதிகள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு 34, மாணவியருக்கு 21, கல்லூரி மாணவர்களுக்கு 3, மாணவியருக்கு 2 விடுதிகள் உள்ளன.
ஒவ்வொரு விடுதியிலும் அதிகபட்சமாக 100 முதல் 120 மாணவர்களும், குறைந்தபட்சமாக 50 முதல் 55 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதிக்கு ஒரு வார்டன், 2 சமையலர், வாட்ச்மேன் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான விடுதிகளில், பணியாளர்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தவிர வார்டன்கள் விடுதியில் தங்குவதில்லை. மாணவர்களின் கல்வித்தரம் மட்டுமின்றி பாதுகாப்பும், கேள்விக்குறியாகி வருகிறது.
விடுதி காப்பாளரின் பணி
தினமும் காலை 5.30- 6.30 மணி, மாலை 6- 7.30 மணி வரை மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரவு விடுதியில் தங்கவேண்டும். வாரத்தில் முதல் மற்றும் 3வது புதன் கிழமைகளில் கோழிக்கறி சமைத்து போட வேண்டும். 2வது மற்றும் 4வது வாரம் புதன் கிழமை ஆட்டு இறைச்சி சமைத்து போடவேண்டும்.
தவிர, தினமும் மாலையில் அவித்த சுண்டல் மற்றும் சுக்குமல்லி காப்பி கொடுக்க வேண்டும். அதேபோல் வாரத்திற்கு 3 முறை முட்டை வழங்க வேண்டும். இதுபோன்ற நடைமுறை பெரும்பாலான விடுதிகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் மட்டுமின்றி வாய்க்கு ருசியாக சாப்பிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, விடுதி மாணவர்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டு விரைவில் காலியாக உள்ள வார்டன் பணியிடங்களை நிரப்ப, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் நாகநாதன் கூறியதாவது: மாவட்டத்தில் உச்சிநந்தம், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், நீராவி உள்ளிட்ட எட்டு இடங்களில் வார்டன்கள் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. அருகிலுள்ள மற்ற விடுதி காப்பாளர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். காலிப்பணியிடம் குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
