பெயரளவில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ்
பெயரளவில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பு துறை லைசென்ஸ்
UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM
ADDED : ஜூலை 05, 2014 11:30 AM
காரைக்குடி: உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்படும் லைசென்ஸ், ஆய்வின்றி பெயரளவில் வழங்கப்படுவதால், அதன் நோக்கமே சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினாலும், இந்த சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள், 2011-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, சிறிய அளவில் உணவு உற்பத்தி செய்பவர்கள் கூட, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்து, பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உணவு உற்பத்தியை கண்காணிக்க, தொழில் நுட்ப அறிவு பெற்றவரை, அந்த நிறுவனம் நியமிக்க வேண்டும். அவர் குறைந்தது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
உணவு உற்பத்தி செய்யும் இடத்திலேயே, உணவு பொருட்களை பரிசோதனை செய்வதற்கு, பரிசோதனை கூடம் இருக்க வேண்டும். அல்லது அவர்கள் அறிவிக்கும் சோதனை கூடங்களில், உணவு பொருட்களை பரிசோதிக்க வேண்டும். பொட்டலமாக வழங்கும்போது, லேபிள் ஒட்டி அதில், உணவு பொருளில் அடங்கியுள்ள புரோட்டீன், தாதுச்சத்து, ஊட்டசத்து அளவை குறிப்பிட வேண்டும்.
உரிமத்தில் கூறப்பட்டுள்ள உணவு பொருளை தவிர வேறு எதையும் தயாரிக்கக்கூடாது, என பல்வேறு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை பின்பற்றுவோருக்கே உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, லைசென்ஸ் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த விதிகள் எதையும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கருத்தில் கொள்ளாமல், சுத்தமில்லாமல் விற்பவருக்கும் சத்தமில்லாமல் லைசென்சை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது அரசு சார்பில், அங்கன்வாடிகள், இந்த லைசென்சை கண்டிப்பாக பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு லைசென்ஸ் பெறுபவர்கள், அன்றன்று தயாரிக்கும் உணவு பொருளை, எடுத்து வைக்க வேண்டும், என்கின்றனர். மையத்தை பார்வையிடாமலேயே, லைசென்ஸ் பெற அதிகாரிகள் முயல்வதால், எதற்காக இது கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கமே, சீர் குலைவதாக அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கன்வாடி பணியாளர் ஒருவர் கூறும்போது: உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கீழ், அங்கன்வாடிகள் கண்டிப்பாக லைசென்ஸ் பெற வேண்டும், என வற்புறுத்துகின்றனர். இதற்கு செலவாகும் ரூ.100 கட்டணத்தை, அங்கன்வாடிக்கு வழங்கும் தொகையிலிருந்து கழித்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். ஆனால், லைசென்ஸ் பெற ரூ.100-ம், அதை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.50 முதல் 100-ம், ஆட்டோவுக்கு ரூ.100-ம் செலவாகிறது.
இந்த கட்டணத்தை யாரிடம் சென்று வாங்குவது? ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் நேரத்தில், அங்கன்வாடி குழந்தைகளை யார் பார்ப்பது? வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், இது குறித்து கண்டு கொள்வதில்லை. கலெக்டர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். எதற்காக லைசென்ஸ் வழங்குகிறோம், என்பதை அதிகாரிகள், அங்கன்வாடிகளுக்கு நேரடியாக சென்று விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
