ஆரோக்கியமான உடலைப் பெற களரி பயிற்சி: அசத்தும் மாணவர்கள்
ஆரோக்கியமான உடலைப் பெற களரி பயிற்சி: அசத்தும் மாணவர்கள்
UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM
ADDED : ஜூலை 19, 2014 10:45 AM
மடத்துக்குளம்: மன்னர்கள் பல போர்களில் பயன்படுத்திய தற்காப்பு கலையான களரியை பயில்வதன் மூலம் ஆரோக்கியமான உடலை பெறலாம்.
கடுமையான பயிற்சிகளை உள்ளடக்கிய போர்பயிற்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது களரியாகும். இதில் வடக்கன் மற்றும் தெக்கன் களரி என இரண்டு வகையாக பயிற்சி, தாக்கும் முறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒற்றைச்சுவடு, இரட்டைச்சுவடு, நடசாரி, சைலாத், சுவடு முறை, ரெட்டாங்கசுவடு, ஈரடிப்புச் சுவடு, தட்டுவர்ம சுவடு, வாலிவழச் சுவடு, சன சுவடு, பரிவு சுவடு உட்பட பல்வேறு ஆயுதப்பயிற்சிகளை உள்ளடக்கியது தெக்கன்களரி எனவும், மெய்பயிற்சி முறை, கைப்போர் முறை, உருமி, கம்பு, ஈட்டி, வாள், கேடயம், ஒற்றை, கட்டாரி போன்ற பயற்சிகளை உள்ளடக்கியது வடக்கன்களரி எனவும் பயிற்றுவிக்கப்படுகிறது.
மன்னர்கள் ஆட்சி நடந்த காலகட்டத்தில் போர்பயிற்சிகளில் இந்த களரிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். பழசிவர்மன், மார்த்தண்டவர்மன், கேரளவர்மன் ஆகிய மன்னர்கள் சுதந்திர போரில் ஈடுபட்டபோது, இந்தக்கலையை அடிப்படையாக பயன்படுத்தி பல போர்களில் ஈடுபட்டதாக வரலாற்று ஆதாரங்களில் உள்ளன.
இந்த கலையை தொடக்கக்காலங்களில் காடுகளில் வாழ்ந்த முனிவர்கள், தங்கள் பாதுகாப்புக்காக உருவாக்கி பின்னாளில் அதை முறையான போர் வியூகமாக அமைத்துள்ளனர். இண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இந்தக்கலையை கற்க, அதிக நாட்கள் தேவைப்படும் என்பதாலும், ஆயுதங்கள் பயன்படுத்துவதாலும் தற்போதைய நாட்களில் மறைந்து வருகிறது.
இந்த கலைகுறித்து தமிழ்நாடு களரிபைட் அசோசியேசன் பொதுசெயலாளர் வீரமணி கூறியதாவது: கடந்த நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தக்கலையை கற்றுவருபவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதற்கு காரணம் கடுமையான பயிற்சி முறையை பல ஆண்டுகள் தொடர்ந்து பயில வேண்டும் என்பதும், இந்தக்கலை குறித்து விழிப்புணர்வு குறைந்து வருவதும் தான்.
அகத்திய முனிவர் உள்ளிட்ட பல்வேறு முனிவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கலையின் அடிப்படை பயிற்சியும், நரம்புகள் சம்பந்தமான தொடுதல்களும் மற்றும் அழுத்தம் வழங்குதலும் தற்போது ஆயுர்வேத உலுச்சல் முறையாக பல இடங்களில் பயன்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற கலைகள் தற்பாதுகாப்புக்காகவும், மருத்துவத்துகாகவும் உருவாக்கப்படுகிறது. பின்னாளில் போர்க்கலையாக மாற்றப்பட்டது. இதனை மீண்டும் மருத்துவத்துக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கான பயிற்சியாகவும் அனைவரும் கற்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
