திருப்பூரில் மருத்துவக் கல்லூரி அமையாதா? - மக்கள் ஏக்கம்
திருப்பூரில் மருத்துவக் கல்லூரி அமையாதா? - மக்கள் ஏக்கம்
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 01:15 PM
திருப்பூர்: சட்டசபை கூட்டத்தொடரில், மருத்துவ கல்லூரி அமைவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு, பொய்த்து போனது.
கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்து உருவான திருப்பூர், அதிகளவு மக்கள் தொகையை கொண்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களோடு ஒப்பிடுகையில், விபத்து மற்றும் தற்கொலை சம்பவங்கள், திருப்பூரில் அதிகமாக நடக்கிறது. மக்கள் தேவைக்காக, திருப்பூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2010ல், இதுகுறித்து ஆய்வுகளை துவக்கிய உயரதிகாரிகள், "மருத்துவமனைக்கு சொந்தமாக 24 ஏக்கர் நிலம் உள்ளது; வேறு பகுதியை காட்டிலும், ஒரே வளாகத்தில் மருத்துவ கல்லூரி இருந்தால் சிரமம் குறையும்" என, ஆலோசனை தெரிவித்தனர்.
இதன்பின், 50 படுக்கைகளுடன் புதிய பிரசவ வார்டு கட்ட, 3.5 கோடி ஒதுக்கப்பட்டு, பணி விரைந்து முடிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். உலக வங்கி குழுவினர், சுகாதாரத்துறை செயலர் பவன்குமார் பன்சால், ஒருமுறை சுகாதாரத்துறை அமைச்சர் என, ஆய்வு நீண்டது.
திருப்பூர் மாவட்டத்துக்கு வந்த சட்டசபை மனுக்கள் குழு, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை பார்வையிட்டது. பணிகள் சுறுசுறுப்பாக நடந்ததால், சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என, மருத்துவத் துறையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கடந்த 11ல் நடந்த மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மீதான மானிய கோரிக்கையில், திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
கரூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது. திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென பத்து ஆண்டுகளாக வலியுறுத்தியும், எந்த அறிவிப்பும் வெளியாகாததால், மருத்துவத்துறையினரும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், "மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள், 60 கி.மீ., பயணம் செய்து, கோவை அல்லது ஈரோடு செல்ல வேண்டியுள்ளது. மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால், இவ்வசதிகள் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும். டாக்டர் மற்றும் செவிலியர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதுடன், உயர் ரக சிகிச்சைகள் உடனுக்குடன் கிடைத்திருக்கும். எனவே, திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
