பணிப் பதிவேடு பராமரிப்பு பணியில் சுணக்கம் - விபரங்களை சரிசெய்ய உத்தரவு
பணிப் பதிவேடு பராமரிப்பு பணியில் சுணக்கம் - விபரங்களை சரிசெய்ய உத்தரவு
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 12:16 PM
காரைக்குடி: ஆசிரியர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு பணியில், சுணக்கம் நிலவி வருவதாக ஆய்வின்போது தெரிய வந்ததை தொடர்ந்து, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அவற்றை கண்காணித்து விபரங்களை சரி செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, ஒன்றியத்துக்குட்பட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பதிவேடுகளில், உரிய பதிவு, முறையாக பதியப்படாமல் இருப்பதாக துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறைகளை சரிசெய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை, பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விடுப்பு விபரங்கள், சரியான முறையில் பதியப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும். பணிப் பதிவேட்டில், உயர்கல்வி விபரங்களை, பதியப்படும் முன்பு, உயர்கல்வி பயில்வதற்கு, துறை அனுமதி பெறப்பட்டுள்ளதா? சான்றிதழ் தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என சரிபார்க்க வேண்டும்.
இந்த பணி பதிவேடு பட்டியலின்படியே, முன்னுரிமை பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, இதில் தவறு இருந்தால், அதற்கு அந்த அலுவலரே பொறுப்பாவார். அவர்மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் பணிக்காலம் சரிபார்த்தல் பணி மேற்கொள்ள வேண்டும். பணிக்காலம் சரிபார்த்தல், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்றவைகளை பதிவு செய்ய ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்தினால், வேலை பளு குறைந்து வேலை திறன் அதிகரிக்கும்.
எனவே, உதவி கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தங்களது ஆளுகையின் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் விபரங்கள் விடுபட்டிருப்பின், அவற்றை 15 நாட்களுக்குள் பதிவு செய்து உரிய பிரிவு எழுத்தரின் கண்காணிப்பில் வைக்க வேண்டும்.
கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலமாக, வேறு ஒன்றியங்களுக்கு செல்ல நேர்ந்தால், அவர் பணியாற்றிய ஒன்றியத்தில் உள்ள பணிப்பதிவேட்டில், அனைத்தையும் பதிவு செய்து விட்டுதான் செல்ல வேண்டும். இவற்றை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
