சரஸ்வதி மஹால் அரிய ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மிகவும் அவசியம்: கலெக்டர்
சரஸ்வதி மஹால் அரிய ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மிகவும் அவசியம்: கலெக்டர்
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 12:13 PM
தஞ்சாவூர்: இலக்கணம், இலக்கியம், மருத்துவம் மற்றும் முந்தைய வாழ்க்கை முறைகளை, எதிர்வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள, சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும் என, பயிலரங்கில் கலெக்டர் தெரிவித்தார்.
புதுடெல்லி தேசிய சுவடிகள் பாதுகாப்பு திட்டம் சார்பில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில், சுவடிகள் பாதுகாப்பு பயிலரங்கம் நடந்தது. இதில் கலெக்டர் சுப்பையன் தலைமைவகித்து பேசியதாவது: வீடுகளில் பத்திரங்களை தலைமுறையாக எவ்வாறு பாதுகாக்கின்றமோ, அதேபோல அரிய ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.
அதிலுள்ள தகவல்களை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, தற்பொது உள்ள நடைமுறைக்கு தகுந்தாற்போல் தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும்.
சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்த்துறையில் கிட்டதட்ட, 7,700 தலைப்புகளில் 4,500க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றுள் இலக்கணம், இலக்கியம், ஜோதிடம், மருத்துவம், முதலான பிரிவுகளில் சுவடிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
இச்சுவடிகளுக்கான விளக்க அட்டவணைகள் இதுவரை, 26 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவச் சுவடிகள் குறித்து, 12 விளக்க அட்டவணைத் தொகுதிகளும், இலக்கியம் முதலானவை குறித்து, 14 விளக்க அட்டவணைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், திருப்புகழ், பாரதம், இராமாயணம் முதலிய சமய, காப்பிய, இலக்கியச் சுவடிகள் பல பிரதிகளைக் கொண்டுள்ளன.
தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காடணீகை, நம்பியகப் பொருள், சிதம்பரப்பாட்டியல், தண்டியலங்காரம், தொன்னூல் விளக்கம் முதலான இலக்கணச் சுவடிப்பிரதிகளும், திவாகர நிகண்டு ஆகிய சுவடிகள் பல உள்ளன. இந்த நூலகம் மூலம், 175க்கும் மேற்பட்ட தமிழ்சுவடி பதிப்பு நூல்களை வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாவலர் ஜெயராஜ் (ஓய்வு), சரஸ்வதி மகால் நூலக ஆளுமை குழு நூலக உறுப்பினர் பலர் பங்கேற்றனர்.
