நுாலக புத்தகங்களை ஒட்டுமொத்தமாக அனுப்பியதால் பண்டல் பண்டலாக தேங்கின!
நுாலக புத்தகங்களை ஒட்டுமொத்தமாக அனுப்பியதால் பண்டல் பண்டலாக தேங்கின!
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 12:52 PM
மதுரை: தமிழக அரசு நுாலகத்துறை, நான்கு ஆண்டுகளில் அனுப்ப வேண்டிய புத்தகங்களை, ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அனுப்பியதால், மதுரையில் நுாலகங்கள்தோறும் புத்தகங்கள், பண்டல் பண்டலாக தேங்கி கிடக்கின்றன.
மாவட்டத்தில் தாலுகா நுாலகங்கள் 11, கிளை நுாலகங்கள் 68, கிராமப்புற நுாலகங்கள் 62, பகுதி நேர நுாலகங்கள் 22 என 163 நுாலகங்கள் உள்ளன. இவற்றிற்கு நுாலகத்துறை இயக்குனரகத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்., நவம்பரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
சென்னையிலிருந்து அனுப்பப்படும் புத்தக விபரங்களை நுாலக பதிவேட்டில் பதிவு செய்து, அவை வாசகர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஆனால் நான்கு ஆண்டுகளாக அனுப்ப வேண்டிய புத்தகங்களை ஒரே நேரத்தில் மொத்தமாக அனுப்பியதால் பண்டல், பண்டல்களாக புத்தக மூடைகள் நுாலகங்களில் தேங்கி கிடக்கின்றன.
இதுபற்றி நுாலக வட்டாரத்தில் விசாரித்த பொழுது, "இதுவரை மதுரை மாவட்ட கிளை நுாலகங்களுக்கு 2.5 லட்சம் புத்தகங்களை அனுப்பியுள்ளோம். ஒவ்வொரு பதிப்பகத்தாரும் 800 தலைப்புகளில் புத்தகங்களை அனுப்பி இருக்கின்றனர். ஒவ்வொரு பதிப்பகத்தாரும் வெவ்வேறு தலைப்புக்களில் எத்தனை புத்தகங்கள் அனுப்பியுள்ளனர் என்பது உள்ளிட்டவற்றை சரிபார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது.
2010-2011 ஆண்டில் தமிழ் பதிப்பகங்கள் 857ம், ஆங்கில பதிப்பகங்கள் 90ம், 2011-2012 ஆண்டில் தமிழ் பதிப்பகங்கள் 1086ம், ஆங்கில பதிப்பகங்கள் 108 தவிர ராஜாராம் மோகன்ராய் ஆராய்ச்சி நிலைய நிதியின் மூலம் 60 பதிப்பகங்கள் புத்தகங்களை அனுப்பியுள்ளன. இவ்வளவு புத்தகங்களை எப்படி குறுகிய காலத்தில் பட்டுவாடா செய்ய முடியும்?" என்றனர்.
