UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 12:08 PM
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பல பள்ளி வளாகங்களில், தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் அச்சமடைகின்றனர்.
திருப்பூர் நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, கே.எஸ்.சி., அரசு பள்ளி மற்றும் வீரபாண்டி, கருப்பகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பள்ளிகளில், தெருநாய்கள், பள்ளி வளாகங்களில் கூட்டமாக காணப்படுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பகல் முழுவதும் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன. மாணவ, மாணவியர் அமரும் மரத்தடி நிழலில், விளையாடும் பகுதிகளில் நாய்கள் படுத்துக் கொள்கின்றன. மதிய உணவு சாப்பிடும் இடங்களிலும் காணப்படுகின்றன.
இதனால், மாணவர்கள் அச்சமடைகின்றனர். பள்ளி வளாகத்தில் நாய்கள் மலம், சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்துவதால் மாணவ, மாணவியர் அருவருப்பு அடைகின்றனர்; சில நேரங்களில், கூட்டமாக குரைத்துக் கொண்டு கடித்து குதறிக் கொள்வதால், வகுப்பறையில் பாடம் நடத்துவது பாதிக்கிறது.
ஆசிரியர்கள் கூறுகையில், "பல மாதங்களாக, பள்ளிகளில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. நோய்வாய்ப்பட்ட நாய்களும் உள்ளதால், அச்சமாக இருக்கிறது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்த, மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்து விட்டோம், நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்" என்றனர்.

