பஸ் படிக்கட்டில் தொங்கும் பள்ளி மாணவர்கள் - நடவடிக்கைத் தேவை
பஸ் படிக்கட்டில் தொங்கும் பள்ளி மாணவர்கள் - நடவடிக்கைத் தேவை
UPDATED : ஜன 12, 2015 12:00 AM
ADDED : ஜன 12, 2015 10:53 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், பள்ளி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கோலியனூர் கூட்ரோட்டிலிருந்து பண்ருட்டி வரை உள்ள விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் இப்பகுதியில் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன. இந்நிலையில் குச்சிபாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனூர், வாணியம்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தினந்தோறும் அரசு பஸ் மூலம் விழுப்புரத்திற்கு வந்து செல்கின்றனர்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து செல்லும் இந்த மார்க்கத்தில், ஒரு சில அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள் வேறு வழியின்றி, அப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ் மூலம் பயணம் செய்கின்றனர். இதனால் போதிய இடம் இல்லாததால், படிக்கட்டில் தொங்கியபடி, தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் நிலை உள்ளது. அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், விபத்து ஏற்படும் முன், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
