இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளை மூட மாணவர்கள் எதிர்ப்பு
இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளை மூட மாணவர்கள் எதிர்ப்பு
UPDATED : பிப் 19, 2015 12:00 AM
ADDED : பிப் 19, 2015 12:10 PM
11 இடங்களில்...:
மும்பை, கோல்கட்டா, சென்னை உட்பட 11 இடங்களில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 1,000க்கும் மேலான மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக, மருத்துவக் கல்லூரிகளை சரியாக நடத்த முடியாமல், இ.எஸ்.ஐ., நிர்வாகம் திணறி வருகிறது.
இதனால், மருத்துவ சேவையை மட்டும் தொடர்வது எனவும், மருத்துவ கல்லூரிகளை, அந்தந்த மாநில அரசுகளுக்கு தானமாக தரவும், இ.எஸ்.ஐ., நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்; மனித சங்கிலியும் நடந்தது.
கட்டமைப்பு வசதி:
போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள, 11 இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளிலும், போராட்டம் நடக்கிறது; மாநில அரசு ஏற்று நடத்துவதில் தவறில்லை. கே.கே.நகர் கல்லூரியில், போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி கிடைக்கவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே, எங்கள் கோரிக்கை. டில்லியில் நடக்கும், இ.எஸ்.ஐ., நிலைக்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, மாணவர்கள் கூறினர்.
