சுற்றுப்புற சூழலை பாதிக்காத டூவீலர்; பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு
சுற்றுப்புற சூழலை பாதிக்காத டூவீலர்; பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு
UPDATED : பிப் 19, 2015 12:00 AM
ADDED : பிப் 19, 2015 12:41 PM
மானாமதுரை: சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில், 36 ரூபாய் செலவில் 400 கி.மீ., தூரம் இயங்கும் எலக்ட்ரிக் டூவீலரை மானாமதுரை பொறியியல் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
மானாமதுரையில் டீ கடையில் பணியாற்றுபவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன். ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வருகிறார். மானாமதுரை ஒ.வெ.செ., பள்ளியில் படிக்கும் போதே டூவீலரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் தானாகவே 108 ஆம்புலன்சிற்கும், வீட்டிற்கும் தகவல் சொல்லும் கருவியையும், பெண்களின்பாதுகாப்பிற்காக ’லேடீஸ் சேப்டிபின்’ என பலவற்றை கண்டுபிடித்துள்ளார்.
பேட்டரி பைக்:
ரதம் என பெயரிட்டுள்ள சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பில்லாத இந்த இரண்டு சக்கர வாகனம் மின்சாரத்தால் சார்ஜ்செய்யப்படும் பேட்டரியை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்தட்டுப்பாடு ஏற்பட்டால் சோலார் சார்ஜரிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 400 கி.மீ., தூரம் 75 கி.மீ வேகத்தில் செல்லலாம். இந்த இ- பைக் 300 கிலோ எடை வரை தாங்கும்.
தற்போது இதனை வடிவமைக்க 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். விற்பனைக்கு வரும்போது இதனுடையவிலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. எடை, பராமரிப்பு செலவு குறைவு என அறிமுகப்படுத்தியுள்ளார்.
மணிகண்டன் கூறுகையில், “இந்த வாகனத்தை 2 ஆண்டுகளாக வடிவமைத்துள்ளேன். மற்றபெட்ரோல் வாகனத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பேட்டரியில் இயங்குவதால் சத்தம் வராது. புகை கிடையாது. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 400 கி.மீ.,தூரம் இயங்கும். இரண்டு பேட்டரிகள் பயன்படுத்தினால் 800 கி.மீ., தூரம் வெறும் 72 ரூபாய்(24யூனிட்) செலவில் செல்லலாம்.
இந்த இ-பைக்கின் பேட்டரிக்கு ஒரு லட்சம் கி.மீ., தூரம் உத்திரவாதம் உண்டு. இ-பைக்கில் டச் ஸ்கிரீன் வசதி உள்ளது. ஜி.பி.எஸ்.,வசதி உள்ளதால் வண்டி எங்கு உள்ளது என அதன் எண் மூலம் கண்டறியலாம். வண்டி திருடு போனால் கூட உடனடியாக கண்டு பிடித்து விடலாம். இ-பைக்கில் உள்ள டயர்களில் காற்று அழுத்தம் உள்ளிட்டவற்றை முன்புற பேனலில் பார்த்து சரி செய்து கொள்ளலாம். இதில் ஏற்படும் கோளாறுகளை மெக்கானிக்கிடம் கொண்டு செல்ல வேண்டியது இல்லை. லேப்டாப் மூலம் இணைத்துவிட்டால், என்ன பிரச்னை என பார்த்து சரி செய்து கொள்ளலாம்,” என்றார்.
