உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் வனக்கல்லூரி மாணவர்கள்
உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் வனக்கல்லூரி மாணவர்கள்
UPDATED : பிப் 21, 2015 12:00 AM
ADDED : பிப் 21, 2015 11:11 AM
மேட்டுப்பாளையம்: தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள், உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 213 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வனச்சரகர் பணிக்கு, 100 சதவீதம், இட ஒதுக்கீடு; வனவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும், என கோரி, கடந்த மாதம், 27ம் தேதியிலிருந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர். கடந்த 4 நாட்களாக, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை வரை 51 பேர் மயக்கமடைந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் கூறுகையில், "நேற்று முன் தினம் இரவு, 8:00 மணியளவில், வனக்கல்லூரி டீன் (பொறுப்பு) பரந்தாமன், உங்களை பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைத்துள்ளது என்றார். மாணவர்கள் சிலர், சென்னை செல்ல தயாரானோம்.
இதற்கிடையில் நள்ளிரவு, கல்லூரி நிர்வாகத்தினர், உண்ணாவிரத பந்தலுக்கு வந்து, தமிழக அரசிடம் இருந்து, உங்களுக்கு அழைப்பு வந்தால், பேச்சுவார்த்தைக்கு போங்கள், என, கூறினர். இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்றனர். நான்கு நாட்களாக உணவு ஏதும் சாப்பிடாததால், மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
