சென்னை ஐ.ஐ.டி.,க்கு வழங்கப்பட்ட 163 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு
சென்னை ஐ.ஐ.டி.,க்கு வழங்கப்பட்ட 163 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு
UPDATED : பிப் 27, 2015 12:00 AM
ADDED : பிப் 27, 2015 11:45 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சென்னை ஐ.ஐ.டி.,க்கு வழங்கப்பட்ட 163 ஏக்கர் நிலத்தை, வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
சென்னை, சர்தார் படேல் சாலையில், ஐ.ஐ.டி., வளாகம் உள்ளது. அருகில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, ராஜ்பவன் உள்ளிட்டவை அமைந்துள்ளன. பல ஆயிரம் மாணவர்கள், இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வு படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இங்கு, ஆய்வுக்கூடம் அமைக்க போதுமான இடவசதி இல்லாததால், சென்னை அருகில் இடம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசிடம், சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகம் கேட்டது. இதையடுத்து, சென்னை அருகே, திருப்போரூர் தாலுகாவில் இடத்தை தேர்வு செய்ய, ஆட்சியருக்கு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவிட்டது.
இதன்படி, காஞ்சி மாவட்டம், தையூர் கிராமத்தில், மேய்க்கால் புறம்போக்கு நிலம், புஞ்சை தரிசு நிலம் என, 162.93 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில், 50 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது. செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த் துறையினர், கடந்த 9ம் தேதி, ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்டனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஐ.ஐ.டி., துணைப் பதிவாளர் சந்திரகாசுவிடம் நிலத்தை ஒப்படைத்தார்.
இதுகுறித்து, ஐ.ஐ.டி., அதிகாரி ஒருவர் கூறும்போது, "தையூர் கிராமத்தில், ஐ.ஐ.டி., சார்பில், ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது. இங்கு, உள்ளூரைச் சேர்ந்த கிராமவாசிகளுக்கு வேலைவாய்ப்பும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்" என்றார்.
