பராமரிப்பிற்கு காத்திருக்கும் அரசு பள்ளிக்கட்டடங்கள்
பராமரிப்பிற்கு காத்திருக்கும் அரசு பள்ளிக்கட்டடங்கள்
UPDATED : செப் 01, 2015 12:00 AM
ADDED : செப் 01, 2015 11:37 AM
உடுமலை
:
அரசுப்பள்ளி கட்டடங்களை பராமரிக்க, பெறப்பட்ட
விண்ணப்பங்கள் மீது எவ்வித நடவடிக்கையும், ஒன்றிய
நிர்வாகம் மேற்கொள்ளாததால், மாணவர்களின்
பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில்,
சிதிலமடைந்த கட்டடங்களால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அரசின் சார்பில், அவற்றை பராமரிப்பதற்கும், இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களை உடனடியாக
அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அனைத்து
மாவட்டங்களிலும், இதற்கான பணிகள் சில
மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பூர்
மாவட்டம் உடுமலையில், பள்ளிகளிலிருந்து
இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நீண்ட கால இடைவெளிக்கு பின்னரே, இத்திட்டத்தின் மூலம் பராமரிப்பு பணிகள்
செய்வதற்கு 10க்கும் மேற்பட்ட
பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இப்பணிகளை
மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒப்புதலும் பெறப்பட்டது.
இருப்பினும், தற்போது வரையிலும்,
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் எந்த
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒவ்வொரு
நாளும் மாணவர்கள் உயிர் பயத்துடனேயே வகுப்பறையில் அமர்ந்திருக்க வேண்டியதுள்ளது.
சில பள்ளிகளில், இரண்டு வகுப்பு
மாணவர்களை ஒரே அறையில் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
இதனால்,
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பலமுறை பராமரிப்பு பணி செய்வதற்கு, விண்ணப்பம் அளித்து, கடந்த கல்வியாண்டு இறுதிலேயே பணிகளை மேற்கொள்ள
அரசு அறிவித்தது. இதனால், பணிகள் விரைவில்
நடக்கும் என எதிர்பார்த்து மீண்டும் விண்ணப்பித்தோம். பராமரிப்பு பணிகளுக்கு
பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டெண்டர்
விடப்பட்டுள்ளதாக மட்டுமே நீண்ட நாட்களாக ஒன்றிய நிர்வாகத்தில் கூறுகின்றனர்.
அடுத்த கட்ட பணிகள் எதுவுமே துவக்கப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாகத்தினரே அலைக்கழிக்கப்படுகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ஒன்றிய நிர்வாகத்தின் பொறுப்பில் இப்பணிகள் நடப்பதால், அதை விரைந்து துவக்குவதற்கு மட்டுமே அறிவுறுத்த முடியும் என்றனர். சிதிலமடைந்த வகுப்புகளால், பாடம் நடத்துவதற்கும் சிரமமாக உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தில் பராமரிப்பு பணிகளை விரைந்து செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
செப்டம்பரில்
துவக்க அறிவுறுத்தல்
ஒன்றிய
நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிகளை
எடுத்து நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு, பணி
ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. செப்., முதல் வாரத்தில்
பணிகளை துவக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவடையும் என்றனர்.
