அதிர்ச்சியில் பெரியார் பல்கலை தொகுப்பூதிய பணியாளர்கள்
அதிர்ச்சியில் பெரியார் பல்கலை தொகுப்பூதிய பணியாளர்கள்
UPDATED : ஜன 14, 2016 12:00 AM
ADDED : ஜன 14, 2016 02:11 PM
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், 108 அலுவலக பணியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள், முன்னுரிமை வழங்காததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலை, கடந்த 1997 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, 90க்கும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் துவக்கம் முதலே, அலுவலக பணியாளர்கள் போதுமான அளவுக்கு நியமனம் செய்யப்படவில்லை.
இதனால், கடந்த 1999 முதல் 2007ம் ஆண்டு வரை, 350க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மிகக்குறைவான சம்பளம் என்ற போதும், பணிநிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளதாக கருதி, இவர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இதற்கேற்ப, கடந்த 2010 ஜூலை, 1ம் தேதியன்று 350தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால், விரைவில் பணிநிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது என நம்பி வந்தனர்.
108 பணியிடம்: இந்நிலையில், பெரியார் பல்கலையில், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களில், 108 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்யவோ, முன்னுரிமை வழங்கவோ எவ்வித நடவடிக்கையும், பல்கலை நிர்வாகம் எடுக்காமல், புதிய ஆட்களை நியமிக்க அவசரம் காட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிநிரந்தரம்?: இதுகுறித்து பெரியார் பல்கலை தொகுப்பூதிய பணியாளர்கள் கூறியதாவது: குறைந்த சம்பளத்தில், தொகுப்பூதிய அடிப்படையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, 180க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலானோர், 40 வயதை தாண்டிய நிலையில், வேறு பணிக்கு செல்வது என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது.
எங்களுக்கு பணிநிரந்தரம் வழங்காமல், புதிய அறிவிப்பு வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் எங்களுக்கு முன்னுரிமை வழங்காதது மட்டுமல்ல, வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமையோ, முறையான இட ஒதுக்கீட்டு முறையோ கடைபிடிக்கவில்லை. மேலும், பொங்கல் விடுமுறையுடன் சேர்த்து, 12 நாள் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவசர அவசரமாக பணியாளர்களை நியமனம் செய்வதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பணிப்பாதுகாப்பு: பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறியதாவது: தொகுப்பூதிய பணியாளர்களில், அரசாணையின் படி, ஒரு சிலருக்கு தகுதி குறைவாக உள்ளது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கையும் அளித்துள்ளோம். தொடர்ந்து அவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நிச்சயம் பணிப்பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
