பள்ளியில் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா; மாணவர்கள் தவிப்பு!
பள்ளியில் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா; மாணவர்கள் தவிப்பு!
UPDATED : ஜன 19, 2016 12:00 AM
ADDED : ஜன 19, 2016 10:41 AM
கரூர்
: பள்ளி
அருகில் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடத்தப்பட்டதால், மாணவர், மாணவியர் தேர்வு எழுத முடியாமல்
தவித்தனர்.
கரூர் நகராட்சியின் குமரன் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளிகளில், 21, 24, 26, 30 ஆகிய வார்டுகளில் விலையில்லா மிக்ஸி, பேன், கிரைண்டர் வழங்கும் விழா, நேற்று காலை, 10.30 மணிக்கு நடந்தது. இதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டி.ஆர்.ஓ., அருணா உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில் விழா நடத்தப்பட்டதால், தேர்வு எழுத முடியாமல் மாணவர், மாணவியர் தவித்தனர்.
இதுகுறித்து,
பெற்றோர் கூறியதாவது:
பருவமழை காரணமாக, டிசம்பரில் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வுகள், கடந்த, 11ம் தேதி துவங்கியது. இந்த சூழ்நிலையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன் போன்ற பொருட்கள் பள்ளிகளில் வகுப்பறைகளில் வைக்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுஒருபுறமிருக்க குமரன், கோட்டை மேடு ஆகிய நகராட்சி பள்ளிகளில் அருகில், நேற்று முன்தினம் விழா மேடைகள் அமைக்கப்பட்டது. காலையில், 9 மணி முதல் ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்ப துவங்கின. காலையில் பள்ளி மாணவ, மாணவியர் ஒலிபெருக்கியின் அலறல் சத்தத்தால், தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். இதுமட்டுமல்லாது, 11 மணிக்கு விழா முடிந்த பிறகு, டோக்கன் கொடுக்கப்பட்ட பயனாளிகளில் பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.
மாலை, 3 மணி வரை பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மாணவ, மாணவியர் மதிய உணவு கூட அருந்த இடம் இல்லாமல் பரிதாபமாக, அங்கு, இங்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி அருகில் விடுமுறை தினங்களில், இதுபோல நிகழ்ச்சி நடத்தி வந்ததால் பாதிப்பு தெரியவில்லை. ஆனால், தேர்வு நேரத்தில் அரசு நிகழ்ச்சியை நடத்திய மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
