UPDATED : ஜன 19, 2016 12:00 AM
ADDED : ஜன 19, 2016 10:43 AM
ஐதராபாத்
: தெலுங்கானாவில்,
பல்கலை மாணவர் தற்கொலை செய்தது தொடர்பாக,
மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலை துணைவேந்தர் அப்பாராவ் ஆகியோருக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, ரோகித் வெமுலா, 26, என்ற மாணவர், பிஎச்.டி., படித்து வந்தார். பல்கலை நிர்வாகம், கடந்த மாதம் அவரை, விடுதியில் இருந்து, சஸ்பெண்ட் செய்தது. கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரோகித், நேற்று முன்தினம், பல்கலை வளாகத்தில், தன் நண்பரின் அறைக்கு சென்று தற்கொலை செய்தார். அவர் எழுதிய கடிதத்தில், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்வதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாணவனை தற்கொலை செய்ய துாண்டியதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலை துணைவேந்தர் அப்பாராவ் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, மாணவர் ரோகித்தின் உடலுடன், பல்கலை மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பண்டாரு தத்தாத்ரேயா, அப்பாராவ் ஆகியோர், எந்த வகையில், ரோகித்தை தற்கொலைக்கு துாண்டினர் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
