UPDATED : ஜன 19, 2016 12:00 AM
ADDED : ஜன 19, 2016 10:50 AM
லால்பாக் சாலை:தங்களின் வாகனங்களின் மீது, கார் மோதியது குறித்து கேள்வியெழுப்பியதால், கோபமடைந்த பொறியியல் கல்லுாரி மாணவி, குடிபோதையில் பொதுமக்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குவைத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் மல்லுாரு. இவரது மகள் க் ஷமதா, 20. இவர் பெங்களூரு ஜெயநகரிலுள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி பி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், தன் நண்பர் கரண்ராஜ், இரு தோழிகளுடன், லேவல்லி சாலையில் உள்ள கிளாஸ் ஹவுஸ் ரெஸ்டாரண்டுக்கு வந்திருந்தார். இங்கு சாப்பிட்டு விட்டு, மது குடித்த பின், மாலையில் ஜெயநகரிலுள்ள வீட்டுக்கு, ஷமதாவின் காரில் புறப்பட்டனர்; கரண்ராஜ் காரை ஓட்டினார். லால்பாக் தலைமை நுழைவாயில் அருகில், நான்கு கார்கள் மீது, ஷமதா கார் மோதியது. இருந்தும் காரை நிறுத்தாமல் கரண்ராஜ் ஓட்டினார்.
இதை பார்த்த அப்பகுதியினர் கோபத்துடன், விரட்டி சென்றனர். ஊர்வசி திரையரங்கு அருகில் கரண்ராஜ் காரை மடக்கி பிடித்தனர். அப்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த க் ஷமதா, கீழே இறங்கி, தகராறு செய்ய துவங்கினார்; போதையில் தகாத வார்த்தைகளால் திட்டினார்; சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்த வில்சன் கார்டன் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, க் ஷமதாவையும், அவரது நண்பர்களையும், காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், கரண்ராஜ் தன்னை எம்.எல்.ஏ., மகன் என்று கூறி, போலீசாருடன் தகராறு செய்துள்ளான். தகவல் கிடைத்து, அங்கு வந்த, கரண்ராஜின் தந்தை கோவிந்தராஜ், தன்னை தொழிலதிபர் என்று அறிமுகம் செய்து கொண்டார். மகனின் நிலையை கண்டு, கண்ணீர் விட்டார். மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், கரண்ராஜ் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது; அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஷமதா குடிபோதையில், பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன், தாக்கவும் செய்ததால், அவர் மீதும் வழக்கு பதிவு செய்து, வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இவ்வளவு கலாட்டா நடந்தும், அவரது இரு தோழிகள் காரில் இருந்து கீழே இறங்காததால், அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், அனுப்பி வைத்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
