தமிழக அரசின் மொழிக் கொள்கை நிலைப்பாடு உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக அரசின் மொழிக் கொள்கை நிலைப்பாடு உயர்நீதிமன்றம் கேள்வி
UPDATED : ஆக 08, 2020 12:00 AM
ADDED : ஆக 08, 2020 03:15 PM
மதுரை:
தமிழக அரசின் மொழிக் கொள்கை குறித்த உறுதியான நிலைப்பாட்டை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் தனியார் நிர்வாகத்தின் கீழ் சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதில் ஒரு பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடம் இருக்கும்பட்சத்தில், அதே நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்றொரு பள்ளிக்கு பணி நிரவல் மூலம் நியமிக்கலாமா அல்லது புது நியமனம் மேற்கொள்ளலாமா என்பது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் அமர்வு:
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் தேவையை கண்டறிய கடைசிநாள், மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாள், உபரி ஆசிரியர்களை மாற்றுவதற்கான கடைசிநாள், உபரி ஆசிரியர்களை அந்தந்த கல்வி மாவட்டம் அல்லது தாலுகா அல்லது வருவாய் மாவட்டம் வாரியாக கண்டறியலாமா என பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது.
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம், விதிகள் 1973 ல் கொண்டுவரப்பட்டது. இதற்கஅப்பாற்பட்டு புதுப்புது பிரச்னைகள் எழும்போது, தேவைக்கேற்ப அரசாணைகள், நிர்வாக ரீதியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஒருங்கிணைந்த சட்டம் ஏன் இயற்றக்கூடாது.
தனியார் பள்ளிகள் (சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத) (உதவி பெறும் அல்லது உதவி பெறாத பள்ளிகள்) நிர்வாகம், பணியாளர்கள் பிரச்னைகளை கையாள, திறம்பட நிர்வகிக்க ஒருங்கிணைந்த சட்டம் இயற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா என கேள்வி எழுகிறது. மத்திய அரசு புதியக் கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது.
இச்சூழலில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கற்பிப்பது தமிழ் வழியிலா அல்லது ஆங்கில வழியிலா, ஆங்கில வழிக் கல்வி மட்டும் கற்பிக்கும் பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி எப்படி வழங்கப்போகிறது, தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கு 50:50 என்ற விகிதத்தில் வழங்கப்போகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அரசின் மொழிக் கொள்கை குறித்த உறுதியான நிலைப்பாட்டை தமிழக தலைமைச் செயலாளர் மூலம் பிரமாண பத்திரமாக இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, ஆக.,20 க்கு ஒத்திவைத்தனர்.
