140 சிறுபான்மையின இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி
140 சிறுபான்மையின இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி
UPDATED : ஆக 19, 2020 12:00 AM
ADDED : ஆக 19, 2020 11:44 AM
புதுடில்லி:
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 140 இளைஞர்கள் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர் என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
கடந்தாண்டு நடந்த ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து செல்வது தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. அரசின் கொள்கையாகும்.ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் பிற பொதுத் தேர்வுகளில் சிறுபான்மையின மக்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கடந்தாண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் நாடு முழுதும் 829 பேர் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 140 பேர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்களுக்கும் திறமை உள்ளது. ஆனால் வெளிக் கொண்டு வந்தது பா.ஜ. அரசு தான். இந்த 140 பேரில் 22 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 2.94 கோடி பேருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதே நேரத்தில் கடந்த ஆறு ஆண்டுகால பா.ஜ. ஆட்சியில் 4.60 கோடி பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பொய் பிம்பத்தை உருவாக்கினர். அது தகர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
